பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் மோசடி நபர் கைது


பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் மோசடி நபர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2021 3:44 AM GMT (Updated: 17 Feb 2021 3:44 AM GMT)

சென்னையில் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை வாணிஸ்ரீ. இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த பழமையான நடிகை ஆவார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் கடந்த 1967-ம் ஆண்டு நடிகையாக இருக்கும்போதே வாணி என்டர் பிரைசஸ் என்ற பெயரில் கார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தேன். வாணி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில், 3 கிரவுண்டு நிலத்தை பத்மினி என்பவரிடம் இருந்து வாங்கினேன். அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து கொண்டனர். அமைந்தகரையைச் சேர்ந்த தமீம்அன்சாரி (வயது 43) என்பவர் அந்த நில அபகரிப்பில் ஈடுபட்டார். அந்த நிலத்தை அபகரித்த அவர் வேலி போட்டு, பூட்டு போட்டுவிட்டார்.

ரூ.6 கோடி மதிப்பு

தற்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். நான் கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் அந்த நிலம் வாங்கப்பட்டது. அந்த நிலத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், உதவி கமிஷனர் ராஜ்பால் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நிலத்தை அபகரித்ததாக மோசடி நபர் தமீம்அன்சாரி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இன்னொரு வழக்கு

இதேபோல சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ரகுராமன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்னொரு வழக்கில் கைது செய்தனர்.


Next Story