நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது ஐகோர்ட்டு கருத்து


நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 18 Feb 2021 4:03 AM GMT (Updated: 18 Feb 2021 4:03 AM GMT)

ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் வெளியிட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம், தி.மு.க. சார்பில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதில் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டை ஐகோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் நடராஜன் ஆஜராகி, ‘‘அமைச்சருக்கு எதிரான புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை. அதனால், புகாரை முடித்து வைத்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது’’ என்று கூறினார்.

நற்சான்று இல்லை

இதையடுத்து அந்த ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை கேட்டு அறப்போர் இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதல்-அமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர்கள் ஏற்றுகொண்டனர். அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.சுரேஷ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

தேர்தல் நெருங்குகிறது

அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘‘முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்துள்ளது. அதனால் மனுதாரர்கள் லஞ்ச ஒழிப்புதுறையின் அறிக்கையை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும். அதனால், இந்த வழக்கை முடித்து வைக்கவேண்டும். சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், இந்த வழக்கு குறித்து பொதுமேடையில் பேச வாய்ப்பு உள்ளது’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த காலக்கட்டத்தில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது. தேர்தல் வருவதால், இந்த வழக்கை கோடை விடுமுறைக்கு முன்பாக விசாரிப்பது உகந்ததாக இருக்காது. அதேநேரம், இந்த டெண்டர் முறைகேடு வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது’’ என்று கருத்து தெரிவித்தனர். விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

 


Next Story