மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியக கட்டுமானப்பணிகள் தீவிரம் பிறந்த நாளான 24-ந் தேதி திறக்க திட்டம் + "||" + Intensity of museum construction work at Jayalalithaa Memorial

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியக கட்டுமானப்பணிகள் தீவிரம் பிறந்த நாளான 24-ந் தேதி திறக்க திட்டம்

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியக கட்டுமானப்பணிகள் தீவிரம் பிறந்த நாளான 24-ந் தேதி திறக்க திட்டம்
சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் அருகில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை வருகிற 24-ந் தேதி அவருடைய பிறந்த நாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கடந்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஓரிரு நாட்கள் திறந்து இருந்த நிலையில், நினைவிடம் அருகில் கட்டப்பட்டு வந்த அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா கட்டிடங்களில் மின்சார வேலைகள் நடந்து வந்ததால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து அருங்காட்சியகமும், அறிவுசார் பூங்காவும் திறக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மெழுகு சிலை

ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அவரது சமாதிக்கு மேல்பரப்பில் பீனிக்ஸ் பறவை கட்டிடம் அமைந்துள்ளது. சமாதியின் இடது பக்கத்தில் 8 ஆயிரத்து 555 சதுர அடியில் அருங்காட்சியகமும், வலது பக்கத்தில் அதே அளவில் அறிவுசார் பூங்காவும் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள 2 கட்டிடங்களிலும் கண்ணாடி வேலைப்பாடுகள், கதவுகள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை, அவரது கலை மற்றும் அரசியல் துறையின் சாதனை பயணங்களின் புகைப்பட தொகுப்பு, அவர் பெற்ற விருதுகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் புகைப்பட தொகுப்புகள் ‘டிஜிட்டல்’ வடிவில் இடம் பெற்று உள்ளன. வீடியோ, ஆடியோ தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. அதேபோல் அறிவுசார் பூங்காவில் தன்னம்பிக்கை ஊட்டும் ஜெயலலிதாவின் சாதனைகள், மக்கள் நலன் கருதி செயல்படுத்திய திட்டங்களின் தொகுப்புகள், பணிகள், பேச்சு தொகுப்புகள், மாணவர்களுடனான கலந்துரையாடல், அவர் சொல்லிய குட்டி கதைகள் போன்ற பேச்சுகள் ‘டிஜிட்டல்’ வடிவில் ஒளிபரப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

‘செல்பி’ எடுக்க நவீன கேமரா

அத்துடன் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவம் அருகில் பார்வையாளர்கள் நின்று ‘செல்பி’யும் எடுத்து கொள்ளலாம். இதில் எடுக்கும் புகைப்படங்கள் பார்வையாளர்களின் ‘வாட்ஸ்-அப்’புக்கு செல்லும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அத்துடன் ஜெயலலிதாவின் பொன்மொழிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு உள்ளே செல்வதற்காக 2 பக்கவாட்டிலும் 110 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் கூடிய நவீன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரைகள் மீது சூரிய ஒளிதகடு (சோலார்) பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஜெயலலிதா நினைவிட பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

கட்டிடம் பாதிக்காமல் இருக்க

பொதுவாக தமிழகத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பணிகளில் ‘எல்காட்’ மற்றும் ‘இ-கவர்ன்ஸ்’ துறைகளை சேர்ந்தவர்கள் தான் ஈடுபடுவார்கள். ஆனால் முதன் முறையாக இந்த துறைகளிடம் ஆலோசனை பெற்று நிபுணர்களின் உதவியுடன் பொதுப்பணித்துறை உலகத்தரத்தில் அமைத்து சாதனை படைத்து உள்ளது. குறிப்பாக மெரினா கடற்கரையையொட்டி நினைவிடம் அமைந்துள்ளதால் தட்பவெப்பம், உப்பு காற்றால் கட்டிடம் பாதிக்காத வகையில் ‘பாலியூரிதீன்’ ரசாயனம் பூசப்பட்ட கான்கிரீட் மேற்பரப்புகள் போடப்பட்டுள்ளன.

தற்போது பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால், வருகிற 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திறக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ளதுபோன்று ஜெயலலிதா சமாதியிலும் அணையா விளக்கு அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நினைவகம் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டவுடன் தொடர்ந்து 5 ஆண்டுகள் பொதுப்பணித்துறை இதனை பராமரிக்க இருக்கிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
2. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
3. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
4. ஜெயலலிதா பிறந்தநாளில் தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் உறுதிமொழி ஏற்போம் தொண்டர்களுக்கு, டி.டி.வி.தினகரன் அழைப்பு
தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் செய்து, புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம் என்று தொண்டர்களை டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
5. இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-