தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடக்கம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடக்கம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 18 Feb 2021 4:51 AM GMT (Updated: 18 Feb 2021 4:51 AM GMT)

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 3-ந் தேதி தொடங்கு கிறது. மொத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

சென்னை, 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வுக்கு தயாராகுவதற்கு கால அவகாசம் இருக்குமா? என்பதெல்லாம் மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்கும்போது, சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறி வந்தார். அதை எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று காலையில் திடீரென்று அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மே மாதத்துக்கு தள்ளிப்போனது

தமிழகம், புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் மிகவும் தாமதமாகவே திறக்கப்பட்டன. மேலும், பாடத்திட்டங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் சற்று தாமதம் ஏற்பட்டு வருகின்றன. அதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மே மாதத்துக்கு தள்ளிப்போய் இருக்கிறது என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தாலும் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதமாக சற்று அவகாசம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றே பெரும்பாலான பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்தாக இருந்தது. அதனை மையப்படுத்தியே தற்போது பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் கூறினர்.

தமிழக, புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவும் தேர்வுகள் தள்ளிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

அட்டவணை வெளியீடு

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அட்டவணையின்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. அவ்வாறு தொடங்குகிற இந்த தேர்வு அதே மாதம் 21-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. தேர்வு ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது. அதில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்கவும், அதற்கு அடுத்த 5 நிமிடம் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும் ஒதுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கல்வித்துறை தெரிவித்து இருந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட இருக்கின்றன. தேர்வுக்கு முன்பு நடைபெறும் செய்முறை தேர்வு குறித்த அறிவிப்பையும், பொதுத்தேர்வு நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.

9 லட்சம் பேர்

பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என சுமார் 9 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர்.

அதேபோல், புதுச்சேரியை பொறுத்தவரையில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

Next Story