தமிழ்நாட்டில், ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய், எரிவாயு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


தமிழ்நாட்டில், ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய், எரிவாயு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Feb 2021 4:59 AM GMT (Updated: 18 Feb 2021 4:59 AM GMT)

தமிழ்நாட்டில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் காவிரி படுகை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும்.

இந்த ஆலைக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம்-தூத்துக்குடி

சென்னை எண்ணூரில் உள்ள சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பெட்ரோலில் இருந்து கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலை, ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

எண்ணூர் திரவநிலை எரிவாயு முனையத்தில் இருந்து பல ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச் செல்ல ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவில் குழாய் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில், ரூ.700 கோடி செலவில், ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான குழாய் வழித்தட பணி முடிந்தநிலையில், அந்த வழித்தடத்தை மோடி தொடங்கி வைத்தார்.

நடுத்தர மக்கள் மீது சுமை

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகமாக உள்ளது. கடந்த 2019-2020 நிதியாண்டில் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய 85 சதவீத கச்சா எண்ணெய்யும், 53 சதவீத எரிவாயும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. நம்மைப்போன்ற திறமையான நாடு, எரிசக்திக்கு இறக்குமதியை சார்ந்து இருந்தால் என்ன ஆவது?

நான் யாரையும் குறை சொல்லவில்லை. இந்த விஷயத்தில் நாம் முன்பே கவனம் செலுத்தி இருந்தால், நடுத்தர மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டி இருந்திருக்காது. நடுத்தர மக்களின் கவலைகளை மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஆகவே, தூய்மையான, பசுமையான எரிசக்தி ஆதாரங்களை நாட வேண்டியது நமது அனைவரது கடமை.

இதற்காக, பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், கரும்பு விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கும்.

எல்.இ.டி. பல்பு

சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களை ஊக்குவித்து வருகிறோம். நடுத்தர குடும்பங்களில் எல்.இ.டி. பல்புகள் பய்னபடுத்துவதால் மின்சார செலவை குறைக்கலாம்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் நேரடி மானியத்தை பெற்று வருகிறார்கள். உஜ்வாலா திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 32 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் புதிய எரிவாயு இணைப்பு பெற்றுள்ளன.

எண்ணூரில் இருந்து எடுத்து வரப்படும் எரிவாயு, உரம் தயாரிப்பதற்காக, தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்துக்கு மலிவு விலையில் வழங்கப்படும். இதனால், உரத்தின் உற்பத்தி செலவு குறையும்.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இயற்கை எரிவாயு

நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி 6.3 சதவீதமாக உள்ளது. அதை 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதுபோல், இயற்கை எரிவாயுவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர உறுதி பூண்டுள்ளோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 2030-ம் ஆண்டுக்குள், 40 சதவீத எரிசக்தி தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில், கடந்த 6 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.9 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ரூ.4 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடந்து வருகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டனர்.

Next Story