பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை


பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 18 Feb 2021 8:18 AM GMT (Updated: 18 Feb 2021 8:18 AM GMT)

கடலூர் புவனகிரி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒரத்தூர் போலீஸ் சரகம் காக்கங்குடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை என்கிற ராஜி (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி சிவரஞ்சனி (24). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவரஞ்சனிக்கு கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் சிவரஞ்சனியை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சிவரஞ்சனி அவரது குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார்.

கணவர் ராஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். எதற்காக இப்படி குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று சிவரஞ்சனி அவரது கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் நாம் இருவரும் கருப்பாக உள்ளோம். குழந்தை மட்டும் எப்படி கலராக பிறந்தது என்று மனைவியிடம் கேட்டார். இதனால் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜி அவரது மனைவி சிவரஞ்சனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அதன் பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டில் தூங்கினர்.

நள்ளிரவில் கண்விழித்த ராஜி வீட்டின் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த பச்சிளங்குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் படுத்து தூங்கினார்.

காலையில் கண்விழித்த சிவரஞ்சனி அவரது குழந்தை தொட்டிலில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதபடி குழந்தை இறந்த சம்பவத்தை அவரது கணவர் ராஜியிடம் கூறினார். அப்போது ராஜி கூறிய பதில்கள் சிவரஞ்சனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் சிவரஞ்சனி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

குழந்தையின் இறப்பு தொடர்பாக ராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் ராஜியை போலீஸ்நிலையத்துக்கு அழைத்த சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜி தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ராஜியை கைது செய்தனர். பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் ஆண்குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story