ராமேசுவரம் கடலில் விமான அணிவகுப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்


ராமேசுவரம் தீவுப்பகுதியில் இந்திய விமானங்கள் அணிவகுத்து பறந்து சாகசத்தில் ஈடுபட்ட காட்சி.
x
ராமேசுவரம் தீவுப்பகுதியில் இந்திய விமானங்கள் அணிவகுத்து பறந்து சாகசத்தில் ஈடுபட்ட காட்சி.
தினத்தந்தி 18 Feb 2021 9:38 PM GMT (Updated: 18 Feb 2021 9:38 PM GMT)

ராமேசுவரம் கடல் பகுதியில் விமானங்கள் அணிவகுத்து பறந்தது ஏன்? என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான சாகசம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 10 விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து, அணிவகுத்து பறந்து சாகசங்கள் செய்தன.

இந்திய கடல் எல்லை வரை சென்று வட்டமடித்தும், இந்தியாவுக்கு சொந்தமான தீவுகளின் மீது பறந்து சாகசம் செய்தும், பாம்பன் வடக்கு கடல் வழியாக தங்கச்சிமடம், ராமேசுவரம் மற்றும் பாம்பன் தென்கடல் பகுதியை சுற்றி வந்து, மீண்டும் கடற்படை விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன.

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந்தேதி ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரையிலும் பறந்தன
இந்த ‘விஜய் திவஸ்’ 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் விதமாக விமான சாகசம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, மேற்கண்ட விமானங்கள் அனைத்தும் பெங்களூருவில் இருந்து அணிவகுத்து பறந்து மதுரை வந்து, பின்னர் இந்திய கடல் எல்லை வரை சென்று சாகசம் செய்து வந்துள்ளன. இதுதொடர்பான படங்களும் தற்போது வெளியாகி உள்ளன.

அதாவது, மதுரையில் விமானங்கள் அணிவகுத்து பறந்தது போன்றும், ராமேசுவரம் கடல், பாம்பன் பாலம் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு மேல் விமான அணிவகுப்பு நடந்தது போன்றும் படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த விமான சாகசம் என்பது அண்டை நாடான இலங்கை தீவு பகுதியில் முகாமிட்டுள்ள சீனாவுக்கு எச்சரிக்கை செய்வதற்காக நடந்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ தளமாக...
அண்டை நாடான இலங்கைக்கு சொந்தமான ஒட்டிய நெடுந்தீவு, அனலைதீவு, நயினாத்தீவு ஆகியவற்றில் ரூ.87.60 கோடியிலான காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்தது. இதில் நெடுந்தீவு ராமேசுவரத்தில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கச்சத்தீவில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. மேலும், இந்த 3 தீவுகளில் மின்உற்பத்தி செய்து லாபம் சம்பாதிப்பது என்பது அதன் உற்பத்தி செலவை விட அதிகமாகும். இதனை எல்லாம் மீறி சீனா அந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அதாவது, அந்த தீவுகளை தனது ராணுவ தளமாக மாற்றிக்கொள்வதற்காக தான் சீனா இதை செய்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டே இந்தியா திடீரென்று, ‘விஜய் திவஸ்’ பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கடல் எல்லை வரை சென்று விமான சாகசம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story