கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கொடுத்த உத்தரவாத கடிதம் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? ஐகோர்ட்டு கேள்வி


கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கொடுத்த உத்தரவாத கடிதம் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 18 Feb 2021 10:07 PM GMT (Updated: 18 Feb 2021 10:07 PM GMT)

கடன் வாங்கும்போது நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த உத்தரவாத கடிதம், அவரது சம்பந்தி ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என்று பைனான்சியர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரவாத கடிதம்
சென்னை ஐகோர்ட்டில், சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால் தன்னுடைய சம்பந்தியான ரஜினிகாந்த் தருவார் என்று கஸ்தூரி ராஜா ஒரு உத்தரவாத கடிதம் கொடுத்தார். ஆனால், அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்கவில்லை. எனவே, தன் பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இருவரும் கூட்டு சேர்ந்து என்னை ஏமாற்றியதாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார். அதில், வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளதாக கூறி, போத்ராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார்.

தீர்வு காணவேண்டும்
இதை எதிர்த்து போத்ரா மேல்முறையீடு செய்தார். அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டதால், அந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘எவ்வளவு தொகை கடனாக வாங்கினாரோ, அந்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும்’ என்று கஸ்தூரிராஜா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர், 'பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய உத்தரவாத கடிதம், அவரது சம்பந்தியான நடிகர் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், ‘‘வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்’’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Next Story