தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை, அ.தி.மு.க. இளைஞர் பட்டாளம் முறியடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி


தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை, அ.தி.மு.க. இளைஞர் பட்டாளம் முறியடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 19 Feb 2021 1:15 AM GMT (Updated: 19 Feb 2021 1:15 AM GMT)

வீடு, வீடாக அரசின் சாதனைகளை கூறி அ.தி.மு.க. இளைஞர் பட்டாளம் தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். களக்காட்டில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

நாடகமாடுகிறார்கள்
கருவுற்ற தாய்மார்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சித்த மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவிப் பெட்டகம் இதுவரை 1 கோடியே 7 லட்சம் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, 25 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் 2.94 லட்சம் 
உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை வேரறுத்திடஇந்திய தண்டனைச் சட்டத் திருத்தத்தில் திருத்தம் செய்து கடுமையான தண்டனை வழங்கிட சட்டம் முன்வடிவு பெற்று மத்திய
அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் ஆட்சியில் இருக்கும்போது மக்களை கவனிக்க மாட்டார்கள், மக்களின் பிரச்சினையை தீர்க்க மாட்டார்கள். ஆனால், வெற்றி பெறுவதற்காக, வாக்குகளைப் பெறுவதற்காக ஊர் ஊராக வந்து பொய் பேசி, நாடகமாடி, உங்களை ஏமாற்றி வாக்குகளை பெறுகின்ற கட்சி தி.மு.க. நான் எதுவும் பொய் பேசவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்பாசமுத்திரத்தில் அ.தி. மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

இளைஞர் பட்டாளம்
மு.க. ஸ்டாலின் அவதூறான செய்தியை, பொய்யான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார். அதை முறியடிக்கின்ற விதமாக பாசறை சேர்ந்த சகோதர, சகோதரிகள் அரசு போடுகின்ற திட்டங்களை வீடு வீடாக எடுத்து சொல்ல வேண்டும். அது முக்கியப் பணி. ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 300 பூத்துகள் இருக்கின்றன. ஒரு பூத்தும் 25 பேர் என்று சொன்னால், ஒரு தொகுதிக்கு சுமார் 7,500 பேர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைக்கப்படுகிறது.

ஆகவே, இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு தொகுதியிலே இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் 7,500 பேர் இருக்கின்ற வரலாறு கிடையாது. தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தில்லுமுல்லு செய்வதில் கைதேர்ந்தவர்கள். அதை நம்முடைய இளைஞர் பட்டாளங்கள் முறியடித்து, நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக பாடுபட வேண்டும். தென் மாவட்டங்களை தொழிற்சாலைகள் மிகுந்த மாவட்டங்களாக உருவாக்குவதற்கு எங்களுடைய அரசு தொடர்ந்து பாடுபட்டு 
வருகிறது.

தேர்தல் போர்
தேர்தல் என்ற போர் விரைவில் வரவிருக்கின்றது. அந்த போரிலே இளைஞர் பட்டாளங்கள் எதிரிகளை தேர்தல் களத்திலே ஓட ஓட விரட்டி மீண்டும் அ.தி.மு.க. வெற்றி கொடியை கோட்டையில் பறக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். இந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு அணிவகுத்து நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டம், வள்ளியூர், திருக்குறுங்குடி, மாவடி, திருநெல்வேலி டவுன் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

விமர்சனம்
இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது. அந்த உன்னத நிலையை நாம் அடைந்துள்ளோம். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த பதவியை அடைய முடியும். ஆனால் தி.மு.க. கட்சியில் அப்படி வரவே முடியாது..

முதலில் கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இன்றைக்கு உதயநிதி வந்திருக்கிறார். ஊர்ஊராக போய் உதயநிதி பிரசாரம் செய்கிறார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி குற்றம் கூறி வருகிறார். என்னுடைய அரசியல் அனுபவம் தான் அவர் வயது. அவர் அ.தி.மு.க.வை பற்றி குற்றம் சொல்லி வருகிறார். தி.மு.க.வின் அறிவிப்புகளை இப்போது ஸ்டாலின் அறிவிப்பதில்லை, உதயநிதி அறிவிப்பு வெளியிடும் அளவிற்கு அந்த கட்சி அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. தி.மு.க. நிலைமை இன்றைக்கு இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.

நிதியுதவி உயர்வு
கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 500-லிருந்து 600-ஆக உயர்த்தப்பட்டது. இனி ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 1000-ஆக உயர்த்தப்படும். அதுபோல, இதுவரை 4128 கிறிஸ்துவர்கள் 8.25 கோடி ரூபாய் செலவில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அதற்கான நிதியுதவி 20,000 ரூபாய் கொடுத்து வந்தோம். அந்த நிதியுதவி 37,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கிறிஸ்துவ பெருமக்களின் நலனிற்காக எங்களுடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story