சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி திறந்து வைக்கிறார்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்


கால்நடை பூங்கா அமைக்கும் பணியை நேற்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு
x
கால்நடை பூங்கா அமைக்கும் பணியை நேற்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு
தினத்தந்தி 19 Feb 2021 4:25 AM GMT (Updated: 19 Feb 2021 4:25 AM GMT)

தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா
தலைவாசல் அருகே பெரியேரி ஊராட்சி வீ.கூட்ரோடு அரசு ஆட்டுப்பண்ணையில் 1200 ஏக்கர் நிலத்தில் ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணியை நேற்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி
தலைவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள கால்நடை பூங்கா கட்டிடத்தை வருகிற 22-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் அவர் கால்நடை மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்து, முதலாம் ஆண்டு படிக்க 40 மாணவர்கள் சேர்க்கைக்கான உத்தரவையும் வழங்குகிறார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவக்கல்லூரி கொடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். 3 கால்நடை மருத்துவக்கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கால்நடை மருத்துவக்கல்லூரி
ரூ.118 கோடி மதிப்பீட்டில் 73.8 ஏக்கர் பரப்பளவில் இங்கு 5-வது கால்நடை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 4 கால்நடை மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தேனியில் 6-வது கால்நடை மருத்துவக் கல்லூரியும், உடுமலையில் 7-வது கால்நடை மருத்துவக்கல்லூரியும் திறக்கப்பட உள்ளது.

இங்கு கால்நடை ஆராய்ச்சி மைய கட்டிடம் மற்றும் கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி என அனைத்து கட்டிடங்களும் 3 லட்சத்து 72 ஆயிரத்து 473 சதுரடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் சேலத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமான கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், 

கல்விசார் அலுவலகம், நூலக கட்டிடம், மாணவ-மாணவிகள் விடுதி, காப்பாளர்கள் கட்டிடம், விருந்தினர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, உணவகம், பூங்கா என பல்வேறு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் காவிரி ஆற்றிலிருந்து தனியாக குழாய்கள் பதிக்கப்பட்டு, இந்த கால்நடை பூங்காவுக்கு குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள்
இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், மருதமுத்து, சின்னத்தம்பி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், உதவி கலெக்டர் துரை, ஒன்றியக்குழு தலைவர்கள் ராமசாமி, லிங்கம்மாள், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இளங்கோவன், பெரியேரி ஊராட்சி மன்ற தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித்குமார், கூடமலை ராஜா, தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story