ஆளுநரை திமுக சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே - அமைச்சர் ஜெயக்குமார்


ஆளுநரை திமுக சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 19 Feb 2021 9:26 AM GMT (Updated: 19 Feb 2021 9:26 AM GMT)

தமிழக அமைச்சர்கள் மீதான 2வது ஊழல் பட்டியல் தொடர்பாக ஆளுநரை, திமுக சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள் மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஊழல் புகார்களை தொடுத்து வருகிறார். டிசம்பர் 22ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை மீது ஆளுநரிடம் திமுக 97 பக்கம் ஊழல் புகார்களை ஏற்கனவே கொடுத்துள்ளது. 

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுகிறது எனவும், அத்துடன் 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலையும் ஆளுநரிடம் திமுக அளித்திருந்தது.

இந்தநிலையில் சென்னை ராஜ்பவனில் இன்று மாலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்திக்கிறார். அமைச்சர்கள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில் 2 ம் கட்ட பட்டியலை திமுக அளிக்கிறது. ஆளுநரிடம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு புகார் பட்டியலை அளிக்கிறது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

தமிழக அமைச்சர்கள் மீதான 2வது ஊழல் பட்டியல் தொடர்பாக ஆளுநரை, திமுக சந்திப்பது வெறும் அரசியல் நாடகமே. அரசியல் காழ்ப்புணர்ச்சியால், ஆளுநரை சந்தித்து பொய் புகார் அளிக்க முயற்சிக்கின்றனர்.

நேரடியாக வர சொல்லுங்கள், விவாதத்தை நடத்த சொல்லுங்கள், முகமூடியை கிழிக்கிறோம் நாங்கள்.இன்றைக்கு எங்கள் மடியில் கனம் ஒன்றுமில்லை என்பதுனாலதான் வழியில் பயமில்லை என்ற அடிப்படையில் நாங்கள் நேருக்கு நேருக்கு திமுகவை விவாதம் நடத்த வர சொல்கிறோம். 

நேருக்கு நேர் வர தைரியம் இல்லாதவர்கள், ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி, விளம்பரம் நோக்கம் என்றும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என்பது அந்த காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story