ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2021 6:13 PM GMT (Updated: 19 Feb 2021 6:13 PM GMT)

ஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்ற தடை உத்தரவை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சாவியை ஒப்படைக்க வேண்டும்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக கையகப்படுத்தியதையும், அந்த சொத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டையும் எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நினைவு இல்ல திறப்புவிழாவை நடத்திக்கொள்ளலாம். 

ஆனால், நினைவு இல்லத்தைப் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது. திறப்புவிழா முடிந்ததும் வேதா நிலையத்தின் சாவியை ஐகோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும் என்று இடைக்கால உத்தரவு 
பிறப்பித்திருந்தார்.

அந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சாவியை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

முடித்துவைப்பு
நினைவு இல்லத்தின் சாவியை தமிழக அரசே வைத்துக்கொள்ளலாம். பராமரிப்பு பணிகளையும் அரசு மேற்கொள்ளலாம். ஆனால், பொதுமக்களை பார்வையிட அனுமதிக்கக்கூடாது என்றும் முதல் அமர்வு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு தொகை வழங்கப்பட்டதை எதிர்த்தும் தொடரப்பட்டு, தனி நீதிபதி முன் விசாரணையில் உள்ள வழக்குகளையும் இந்த மேல் முறையீட்டு வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்புள்ள வழக்கில் உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு இரு தரப்புக்கும் அறிவுறுத்தினர். மேலும், தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்துவைத்தும் உத்தரவிட்டனர்.

தடை நீட்டிப்பு
மேலும் அந்த உத்தரவில், ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை, தனி நீதிபதி முன் உள்ள வழக்குகளின் விசாரணை முடியும் வரை நீட்டிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story