‘கோவிஷீல்டு' தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்கக் கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


‘கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்கக் கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2021 7:50 PM GMT (Updated: 19 Feb 2021 7:50 PM GMT)

கொரோனாவுக்கான ‘கோவிஷீல்டு' தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்க வேண்டும். அந்த ஊசியை போட்டதால் பாதிக்கப்பட்ட தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தன்னார்வலர் தொடர்ந்த வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஆசிப் ரியாஸ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடுமையான தலைவலி
கொரோனா தடுப்பு மருந்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், லண்டனைச் சேர்ந்த மருந்து கம்பெனியுடனும் இணைந்து ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை பரிசோதனைக்காக போட்டுக்கொள்ளும் தன்னார்வலராக விருப்பம் தெரிவித்து நானும் விண்ணப்பித்தேன். இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி கோவிஷீல்டு தடுப்பூசியை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் போட்டேன். முதல் 10 நாட்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை. அக்டோபர் 11-ந் தேதி அதிகாலையில் எனக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. எழுந்து நடக்க முடியவில்லை. மதியம் வரை மயங்கிய நிலையில் தூங்கினேன்.

தடுப்பூசியை நிறுத்தவேண்டும்
பின்னர் எனக்கு வாந்தி வந்தது. இதனால், நடக்க முடியாமல், ஆம்புலன்ஸ் மூலம் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். அங்கு அக்டோபர் 26-ந் தேதி வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருந்தினால், எனக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் என் உடல் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இந்த தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது என்று கூறி பொதுமக்களுக்குப் போடுவது முற்றிலும் நேர்மையற்றது. உலக சுகாதார அமைப்பின் விதிகளுக்கு எதிரானது. எனவே இந்த தடுப்புமருந்து உற்பத்தி, வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்க வேண்டும். இந்த தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க சீரம் நிறுவனத்துக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவுக்குப் பதில் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார். விசாரணையை வருகிற மார்ச் 26-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Next Story