தென்காசியில் பயங்கரம்: பாட்டி மற்றும் 1 வயது பேத்தி கொடூரக்கொலை; சாக்குமூட்டையில் கட்டி உடல்களை வீசிய 4 பேர் கைது


கோமதி அம்மாள்; சாக்‌ஷி
x
கோமதி அம்மாள்; சாக்‌ஷி
தினத்தந்தி 20 Feb 2021 10:18 PM GMT (Updated: 20 Feb 2021 10:18 PM GMT)

தென்காசியில் பணத்தை திருப்பி கேட்டதால், பாட்டி- 1¼ வயது பேத்தியை கொடூரமாக கொலை செய்து அவர்களது உடல்களை சாக்கு மூட்டைகளில் கட்டி வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணுவ வீரர்
தென்காசி கீழப்புலியூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் 5-வது தெருவைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி. இவருடைய மனைவி கோமதி அம்மாள் (வயது 55). இவர்களுடைய மகள் சீதாலட்சுமி.இவருக்கும், தென்காசி அருகே கடபோகத்தியைச் சேர்ந்த முருகனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகள் உத்திரா என்ற சாக்‌ஷி (வயது 1¼).
முருகன், காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எனவே, சீதாலட்சுமி தன்னுடைய குழந்தையுடன் கணவரின் வீட்டில் வசித்து வந்தார். கோமதி அம்மாள் தன்னுடைய பேத்தி சாக்‌ஷியின் மீதுள்ள பிரியத்தால், அவளை தனது வீட்டுக்கு அழைத்து வந்து கடந்த சில மாதங்களாக வளர்த்து வந்தார்.

பேத்தியுடன் பாட்டி மாயம்
இந்தநிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி உச்சிமாகாளி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, மனைவி கோமதி அம்மாள், குழந்தை சாக்‌ஷி ஆகிய 2 பேரும் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், தென்காசி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாமியார், மகள் மாயமானதால், காஷ்மீர் மாநிலத்தில் இருந்த முருகனும் சொந்த ஊருக்கு வந்து அவர்களை தேடினார்.

இதற்கிடையே, போலீசாரின் விசாரணையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பாட்டியும், பேத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

பணத்தை திருப்பி கேட்டதால்...
கோமதி அம்மாள் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். தென்காசி அருகே வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி வீரபாண்டி அம்மாளும் (55) கோமதி அம்மாளிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அசலுக்குமேல் வட்டி கட்டிய பிறகும் வீரபாண்டி அம்மாளிடம் பணத்தை திருப்பி தருமாறு கோமதி அம்மாள் அடிக்கடி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டி அம்மாள், அவருடைய மகன் சுரேஷ் என்ற செல்லப்பா (29), மகள் மகேசுவரி (35), உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கொட்டு என்ற பூதத்தான் (60) ஆகிய 4 பேரும் சம்பவத்தன்று கோமதி அம்மாளின் வீட்டுக்கு சென்றனர்.

கழுத்தை நெரித்துக் கொலை
அப்போது உச்சிமாகாளி வெளியே சென்று இருந்ததால், வீட்டில் பேத்தி சாக்‌ஷியுடன் இருந்த கோமதி அம்மாளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். குழந்தை என்றும் பாராமல் சாக்‌ஷியையும் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.பின்னர் இருவரின் உடல்களையும் சாக்கு மூட்டைகளில் வைத்து கட்டி, மோட்டார் சைக்கிள்களில் கடத்தி சென்று, தென்காசியை அடுத்த மத்தளம்பாறை-முத்துமாலைபுரம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகில் உள்ள முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது.

4 பேர் கைது
இதையடுத்து முட்புதரில் சாக்குமூட்டைகளில் வீசப்பட்ட கோமதி அம்மாள், குழந்தை சாக்‌ஷி ஆகியோரது உடல்களை போலீசார் நேற்று மீட்டனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன.பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி அம்மாள், செல்லப்பா, மகேசுவரி, பூதத்தான் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story