ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 11-வது முறையாக அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி போட்டி? - கட்சியினர் எதிர்பார்ப்பு


ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 11-வது முறையாக அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி போட்டி? - கட்சியினர் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 5:26 AM GMT (Updated: 21 Feb 2021 5:26 AM GMT)

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து 11-வது முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்படுமா? என இரு கட்சியின் தொண்டர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் குமாரபாளையம் சட்டசபை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அடிக்கடி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் மட்டும் கடந்த 1977-ம் ஆண்டு முதலே கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தொடர்ந்து 10 முறை அ.தி.மு.க.- தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டது.

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர் பேரூராட்சி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி, அத்தனூர் பேரூராட்சி, பட்டணம் பேரூராட்சி, பிள்ளாநல்லூர் பேரூராட்சி மற்றும் முக்கிய பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதியில் கடந்த 43 ஆண்டுகளாக அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இதில் கடந்த 1989 மற்றும் 2006-ம் ஆண்டு தேர்தலை தவிர அனைத்து தேர்தலிலும் அ.தி.மு.க.வே வெற்றிவாகை சூடி உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து 11-வது முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி தொடருமா? என இரு கட்சியினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதே நேரத்தில் இந்த முறை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரு தரப்பிலும் கூட்டணி கட்சியினரும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகின்றனர். கூட்டணி பங்கீட்டிற்கு பிறகே எந்த கட்சி போட்டியிடுகிறது என்பது தெரியவரும்.

Next Story