கருணாநிதி நினைத்த திட்டங்கள் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்; மு.க.ஸ்டாலின் பேச்சு


கருணாநிதி நினைத்த திட்டங்கள் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்; மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2021 5:49 PM GMT (Updated: 21 Feb 2021 5:49 PM GMT)

கருணாநிதி நினைத்த திட்டங்கள் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமை பெறும் என்று திருப்பூர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

திருப்பூரில் பிரசாரம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பொதுமக்களிடம் குறைகேட்கும் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘வீட்டில் 4 குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப் போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன்’ என்று சொன்னார் கருணாநிதி. அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான், 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்ற இந்த வாக்குறுதி ஆகும்.

காற்றில் கயிறு திரிக்கிறார்
வெற்றி பெற்று, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட மேடையிலேயே வாக்குறுதியை நிறைவேற்றிய கருணாநிதியின் மகன் நான். கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றி பழக்கம் இல்லாதவர் பழனிசாமி. அதனால் தான் ஊர் ஊராக போய் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார் ஸ்டாலின் என்று சொல்லி இருக்கிறார். இப்படி குற்றம் சாட்டுவதற்கு முன்னால், தான் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம் என்பதை பழனிசாமி சொல்ல வேண்டும்.

ஒரு ஆட்சி தொடங்கும்போது நல்ல திட்டங்களை தொடங்க வேண்டும். ஆட்சி முடிவதற்குள் அதனை திறந்து வைக்க வேண்டும். ஆனால் பழனிசாமி, பின்னால் நடந்து போகிறார். 4 ஆண்டு காலம் சும்மா கால் ஆட்டிக்கொண்டு இருந்துவிட்டு ஆட்சி முடியும்போது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆட்சி முடியும் போது காற்றில் கயிறு திரிக்கிறார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை ஏதோ தங்களது சாதனையை போல பழனிசாமி அரசு சொல்கிறது. இது இவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் அல்ல. 1972-ம் ஆண்டு கருணாநிதியால் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு-அவினாசி திட்டம்.1996-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி இத்திட்டத்தின் முதல் கட்டமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு அடுத்தகட்டப்பணிகளை செய்யவில்லை.

2006-ம் ஆண்டு அத்திக்கடவு ‘பேஸ் 2’ திட்டத்தை கருணாநிதி செயல்படுத்தினார். கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை கடன் தர முன்வந்தன. ஆட்சி மாறியது. அத்திக்கடவு குடிநீர் வினியோகத்தையே முடக்கி விட்டார்கள். 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு போடப்பட்டது. நீதிபதிகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். தி.மு.க. பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. சட்டமன்றத்தில் நான் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றேன். இவ்வளவும் நடந்தபிறகு வேறு வழியில்லாமல் இந்த ஆட்சி அறிவித்தது. எனவே, அத்திக்கடவு கனவை தான் நிறைவேற்றியதாக பழனிசாமி, இந்த வட்டாரத்தை ஏய்த்துக்கொண்டு இருக்கிறாரே தவிர அது உண்மையல்ல.

இப்போது இவர்களால் அறிவித்து செயல்படுத்தி வருவதும் அரைகுறையான திட்டம் தான். முழுமையானது அல்ல. தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு முழு பலன் தரும் திட்டமாக விரிவுபடுத்தி நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை இந்த கூட்டத்தில் வழங்குகிறேன்.

பொற்கால ஆட்சி
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஏற்றுமதி - இறக்குமதி விதிமுறைகள் ஆகியவற்றால் சிறுகுறு தொழில்கள் முடங்கிவிட்டது. திருப்பூரில் இருந்து தொழில் முனைவோருக்கு இந்த ஸ்டாலின் ஒரு உறுதியளிக்கிறேன். தொழில் வளர்ச்சிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கும் தி.மு.க. அரசில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். தி.மு.க. ஆட்சி மக்களுடைய பொற்கால ஆட்சியாக அமையும்.

கருணாநிதி என்னென்ன நினைத்தாரோ, என்னென்ன சிந்தித்தாரோ, என்னென்ன திட்டங்களை கொண்டுவந்தாரோ அவற்றை எல்லாம் நிறைவேற்றுவோம். அவர் வழிநின்று என்னுடைய கடமையை நான் உறுதியாக நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story