மாநில செய்திகள்

தேவேந்திரகுல வேளாளர் பெயர் சர்ச்சை: 2 சமுதாய கூட்டமைப்பினரையும் அழைத்துப் பேசி முடிவு எடுக்க வேண்டும்; ஐசரி கே.கணேஷ் பேட்டி + "||" + Devendrakula Vellalar Name Controversy: Decision should be taken by calling 2 community federations; Ishri K. Ganesh

தேவேந்திரகுல வேளாளர் பெயர் சர்ச்சை: 2 சமுதாய கூட்டமைப்பினரையும் அழைத்துப் பேசி முடிவு எடுக்க வேண்டும்; ஐசரி கே.கணேஷ் பேட்டி

தேவேந்திரகுல வேளாளர் பெயர் சர்ச்சை: 2 சமுதாய கூட்டமைப்பினரையும் அழைத்துப் பேசி முடிவு எடுக்க வேண்டும்; ஐசரி கே.கணேஷ் பேட்டி
தேவேந்திர குல வேளாளர் பெயரை வைப்பது தொடர்பாக 2 சமுதாய கூட்டமைப்பினரையும் அழைத்துப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என ஐசரி கே.கணேஷ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் என்ற 7 பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்துவந்தது. இந்த நிலையில், இக்கோரிக்கையை மாநில அரசு ஏற்று ஆணை பிறப்பித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது.

அதன்படி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதுகுறித்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வேளாளர் என்ற பெயரை தங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று முதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் ஆகிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம்
அந்த வகையில், தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் வரும் வேளாளர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மற்றும் வேளாளர் பெயர் பாதுகாப்பு குழு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை தாங்கினார்.இதில் முதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் சமூகங்களை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

2 கூட்டமைப்பையும் அழைத்து பேசி...
உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்ற அம்மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு எங்களது ஆதரவு நிச்சயம் உண்டு. ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க எங்களது வேளாளர் இனப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதை மட்டும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 கூட்டமைப்புகளையும் அழைத்துப் பேசி எங்களுடன் விவாதித்து, எங்களின் கருத்துக்களை தெரிந்துகொண்டு யாருக்கும் எந்தவித பாதகமும் இல்லாமல் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அதை மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இன்னும் பல போராட்டங்கள்
தற்போது, எங்கள் இனத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி போராட்டம் தொடங்கி உள்ளோம். இதைப்போல இன்னும் பல போராட்டங்கள் நடைபெறும். நிச்சயமாக எங்களது வேளாளர் பட்டியலை வேறு யாருக்கும் தரக்கூடாது. இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.