மாநில செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்துகொண்டு இருக்கிறது;மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு + "||" + m.k.stalin

அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்துகொண்டு இருக்கிறது;மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்துகொண்டு இருக்கிறது;மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்துகொண்டு இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு
அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்துகொண்டு இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 
அதல பாதாளம்            
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரை பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கான நிகழ்ச்சி பெருந்துறை கடப்பமடை பகுதியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
 கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எல்லாத் துறைகளிலும், எல்லா வகையிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் நிம்மதியாய் இல்லை. எந்த தொகுதிக்கும் புதிய திட்டங்கள் கிடையாது.  முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தொகுதி கூட கேவலமாகத்தான் இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட செய்து தரவில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தி.மு.க.வால் தான் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு இன்று மனுக்களை இங்கு கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். இப்படி மக்களைச் சந்திப்பது, மனு வாங்குவது கூட பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. பெட்டியைத் தூக்கிகிட்டு திரிகிறார் ஸ்டாலின் என்று கூறுகிறார். பழனிசாமி கூறும்போது  என் ஆட்சியில் வீட்டில் இருந்தே புகார் அளிக்கலாம் என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார்.
1100 திட்டம்
வீட்டில் இருந்து புகார் அனுப்பலாம். உண்மைதான். ஆனால், அதை செய்து தரமாட்டார்கள். இதுதான் பழனிசாமியின் ஆட்சி. புகார் அனுப்பலாம்னுதான் பழனிசாமி சொன்னாரே தவிர, நிறைவேற்றுவேன்னு சொல்லவில்லை. அவருக்கு வாக்குறுதியை நிறைவேற்றவே தெரியாது.  
ஜெயலலிதாவால் 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம்தான் 1100-க்கு போன் செய்தால், உங்கள் குறைகள் தீரும் என்கிற திட்டம். அந்த திட்டம் 5 ஆண்டுகளாக அமலில்தான் இருந்தது. அதில் சொல்லப்பட்ட மக்கள் குறைகள் எவ்வளவு, அதில் தீர்க்கப்பட்டது எவ்வளவு, பழனிசாமியால் சொல்ல முடியுமா?
இப்போது நாம் அறிவித்த பிறகு 1100 திட்டத்தை பழனிசாமி தூசி தட்டி எடுத்து இருக்கிறார். இது ஏற்கனவே அமலில் இருக்கிறது என்றால், இத்தனை பேர் குறைகளைச் சொல்ல எதற்காக கூடுகிறார்கள்? இந்த நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இல்லை என்பதற்கு அத்தாட்சிதான் இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் மனுக்கள் நிரம்பி இருக்கிறது. பழனிசாமி ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் இத்தனை மனுக்கள் வந்திருக்குமா? என்பதுதான் என்னுடைய கேள்வி.
ஒரு கோடி பேர்...
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். எப்படி உருவாக்குவார்?  இந்த 4 ஆண்டில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்?  காலியான அரசுப்பணியிடம் நிரப்பப்பட்டதா? அதுக்கு பதில் சொல்வீர்களா? பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பினீர்களா? தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்களைத் திறக்க என்ன முயற்சி மேற்கொண்டீர்கள்?  தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து ஒரு கோடி பேர் காத்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி இந்த அரசாங்கம் கவலைப்பட்டதுண்டா?  ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று அ.தி.மு.க. கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது. ஆண்டுக்கு எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள்?
தேர்வாணைய தேர்வுகள்
20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இருக்கட்டும். முதலில் தொழில் முனைவோர் மாநாடு மூலம் தொடங்கப்பட்ட தொழில்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. 2-வது தொழில் முனைவோர் மாநாட்டில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது? தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய தேர்வுகள் ரத்தாக என்ன காரணம்? தமிழக பணியிடங்களில் வெளிமாநிலங்களைச் சார்ந்தவர்கள் அதிகமாக சேர்வதற்கு என்ன காரணம்? அது எப்படி சாத்தியமானது?  
பழனிசாமிக்கு இந்த நாட்டு இளைஞர்கள் மீது அக்கறை இருந்து இருக்குமானால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பார். அவர் செய்ய மாட்டார். ஏன் என்றால் அவருக்குச் செய்யத் தெரியாது.
டெண்டர் கொள்ளை
பல்வேறு துறைகள் மூலம் கடந்த 3 மாதத்தில், 40 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பொதுவாக, தேர்தலுக்கு 6 மாதம் முன்பாக, எந்த பெரிய டெண்டரும் விட மாட்டார்கள். ஏனென்றால் ஆட்சி முடிவதற்குள் முடிக்க முடியாது. எனவே இது போன்ற டெண்டர்கள் தவிர்க்கப்படும். ஆனால், இப்போது பணிகளை முடிக்க முடியாது எனத் தெரிந்தும், டெண்டருக்காக சட்ட விதிகளைத் திருத்தி உள்ளனர். 
அ.தி.மு.க. ஆட்சியில் கூச்சம் இல்லாமல் டெண்டர் கொள்ளை நடந்து கொண்டு இருக்கிறது. 3 ஆயிரத்து 888 பணிகளுக்காக, அவசர, அவசரமாக டெண்டர் விட்டுள்ளனர்.  இந்த டெண்டர்களை எடுக்க ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே போன் செய்து, டெண்டர்களை எடுக்க கட்டாயப்படுத்துவதாக தகவல் வருகிறது. அடுத்து நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் எனச் சொல்லி வலுக்கட்டாயமாக டெண்டர் எடுக்கச் சொல்கிறார்கள். ஒருவேளை ஆட்சியே மாறினாலும், தி.மு.க. ஆட்சி வந்தாலும், டெண்டர் பணிகளை நீங்கள்தானே பார்க்கப் போகிறீர்கள். இப்போது கொஞ்சம் பணத்தைக் கொடுங்கள். மீதிப்பணத்தை பிறகு கொடுக்கலாம் என அமைச்சர்களே சொல்வதாக எனக்குத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. 
அண்ணா மீது ஆணை
ஒப்பந்ததாரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நிச்சயமாக, உறுதியாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவே வராது. உறுதியாக அண்ணா மீது ஆணையாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இதுபோன்றடெண்டர்கள் அனைத்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்கிறேன். இதை ஒப்பந்ததாரர்கள் உணர வேண்டும். 
இதற்கிடையே கலைஞர் மக்களுக்காக உழைக்கவில்லை என்று பழனிசாமி பேசியிருக்கிறார். கலைஞரைபற்றி பேச பழனிசாமிக்கு அருகதை, யோக்கிதை இல்லை. பழனிசாமிக்கு கலைஞர் என்றால் யார் என்று தெரியுமா? 
உங்களைப் போல் கூவத்தூரில் முதல்வரானவர் அல்ல கலைஞர். 14 வயதில் தமிழ்கொடி ஏந்தி இந்தி எதிர்ப்பு போர்ப்பரணி பாடியவர். தமிழ் காக்க போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர், 95 வயது வரை தாய்த்தமிழ்நாட்டிற்காக அயராது உழைத்த போராளி. மிகச்சிறந்த நிர்வாகி . அவரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழ் மாநிலம். எத்தனை பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கி இருக்கிறார். ஆட்சி கவிழும் என்று  தெரிந்தே சர்வாதிகாரத்தை எதிர்த்தவர் கலைஞர்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 11-ந் தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலின் தகவல்
தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை 11-ந் தேதி வெளியிடப்படும் என்றும், மே 2-ந்தேதி மக்கள் எழுதும் வெற்றி தீர்ப்பை கட்டியம் கூறும் நாளாக இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. மாநாடு போன்ற கூட்டம் திருச்சியில், லட்சிய பிரகடனத்தை 7-ந்தேதி வெளியிடுகிறேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பிடிப்பதற்கான 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம், லட்சிய பிரகடனத்தை திருச்சியில் 7-ந்தேதி வெளியிட உள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி
நமக்கான நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் என்றும், கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமான அரசாக தி.மு.க. அரசு அமையும் இதுவே தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. ‘ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகள் மூலம் சமூகநீதியை காக்க முடியாது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
வேஷம் போடுபவர்களை மக்கள் நம்பக்கூடாது என்றும், ஆட்சி முடியும்போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியை காக்க முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனு நிறைவு: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விண்ணப்பம்
சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனு நிறைவடைந்தது. சென்னை கொளத்தூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்.