கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2021 1:54 AM GMT (Updated: 23 Feb 2021 1:54 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘டயாலிசிஸ்’ எந்திரத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் மராட்டியம், கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 100 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கும் நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முறையாக பின்பற்றாவிட்டால் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுவரை தமிழகத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 14 லட்சம் பேர் மீது ரூ.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லை பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பை தீவிர படித்தி உள்ளோம். சென்னையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 140-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட எங்கிருந்து இந்த பாதிப்பு ஏற்படுகிறது என கண்டறிந்து அங்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story