அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து கொலை - பழிக்குப் பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை + "||" + ADMK Union Councilor beheaded and murdered - revenge? Police investigation
அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து கொலை - பழிக்குப் பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது38). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் முத்துப்பேட்டை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வந்தார்.
இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் ஆலங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைக்கிடங்கு அருகே சென்றபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களிடம் இருந்து ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார்.
ஆனால் அந்த கும்பல் ராஜேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை கொண்டு இடித்தது. இதனால் நிலை தடுமாறி விழுந்த அவரை, அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் ராஜேசின் தலையை அந்த கும்பல் துண்டித்து கைலியில் சுற்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் சென்றபோது தலை சாலையில் விழுந்தது. இதை கண்டு பதைபதைத்து போன அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து, கொலையாளிகள் தலையை அங்கேயே விட்டு விட்டு தப்பினர்.
தகவல் அறிந்த போலீசார் வெவ்வேறு இடங்களில் கிடந்த ராஜேசின் தலை மற்றும் உடலை கைப்பற்ற சென்றனர். ஆனால் சிலர் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அரசு பஸ் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.
இறந்த ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஒன்றிய கவுன்சிலர் ஆனார். பின்னர் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
பழிக்குப்பழியாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.