மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் மூலவருக்கு பூஜை செய்த விஜயேந்திரர் - அர்ச்சகர்கள் தடுத்ததால் பரபரப்பு + "||" + At the Rameswaram temple Vijayendra who worshiped the source - Excitement as the priests blocked

ராமேசுவரம் கோவிலில் மூலவருக்கு பூஜை செய்த விஜயேந்திரர் - அர்ச்சகர்கள் தடுத்ததால் பரபரப்பு

ராமேசுவரம் கோவிலில் மூலவருக்கு பூஜை செய்த விஜயேந்திரர் - அர்ச்சகர்கள் தடுத்ததால் பரபரப்பு
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நேற்று ராமேசுவரம் கோவிலில் கருவறைக்குள் சென்று மூலவருக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தார். அவரை கோவில் அர்ச்சகர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம், 

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

சுவாமி சன்னதிக்கு வந்த விஜயேந்திரரிடம், கோவில் குருக்கள், அர்ச்சகர்கள் சிலர், ‘கருவறைக்குள் சென்று மூலவரை தொட்டு பூஜை செய்ய கூடாது’ என கூறினர்.

அதற்கு விஜயேந்திரர், ‘கருவறை உள்ளே சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கூறியே தன்னை அழைத்து வந்தனர்’ என்று தெரிவித்தார்.

அப்போது, கோவில் இணை ஆணையர் கல்யாணி, அர்ச்சகர்களிடம் விஜயேந்திரர் கருவறைக்குள் சென்று பூஜை செய்வார் எனவும், அவரை தடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். ஆனால் அர்ச்சகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே விஜயேந்திரரை பூஜை செய்ய விடாமல் தடுத்த குருக்கள், அர்ச்சகர்களை கண்டித்து சாமி சன்னதி முன்பு குவிந்திருந்த ஏராளமானோர் அர்ச்சகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜயேந்திரரை கருவறைக்குள் சென்று பூஜை செய்ய விட வேண்டும் என்றும், உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் அனைவரும் கோவிலின் கருவறைக்குள் வந்து விடுவோம் என கூறியதால் பரபரப்பு நிலவியது.

அப்போது, கோவில் நிர்வாகி ஒருவர் அர்த்த மண்டபத்திற்குள் சென்று விஜயேந்திரரை தடுத்து நிறுத்திய அர்ச்சகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அங்கு வந்தார். கருவறைக்குள் பூஜை செய்ய விஜயேந்திரரை அனுமதிக்க வேண்டும் என அர்ச்சகர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

இதேபோல் விஜயேந்திரருடன் வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, ராமேசுவரம் கோவில் தக்கார் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி உள்ளிட்டோரும் கோவில் குருக்கள்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில், விஜயேந்திரர் கருவறைக்குள் சென்று தான் கொண்டுவந்த கலசத்தில் இருந்த கங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தார்.

இதனை யாரும் பார்க்காமல் இருப்பதற்காக அர்ச்சகர்கள் திரைபோட்டு மறைத்தனர். இதனால் அந்த பூஜையை காண திரண்டிருந்தவர்கள் திரையை அகற்றுமாறு கூறியும், கோவில் அர்ச்சகர்களை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதற்கிடையே கருவறையில் பூஜை முடிந்து அர்த்தசாம மண்டபத்திற்கு வந்த சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அங்கிருந்து மூலவருக்கு தீபாராதனை செய்தார். சுவாமி சன்னதியில் பூஜை செய்த பின்னர், அம்மன் சன்னதிக்கு சென்றும் பூஜை செய்தார்.

ராமேசுவரம் கோவிலுக்கு தங்கக்காசு மாலை, தங்கச்சங்கிலி, வில்வமாலை மற்றும் 11 வெள்ளிகுடங்கள், 2 வெள்ளி வாளி, தீப ஆரத்தி பொருட்களை விஜயேந்திரர் வழங்கினார். பின்னர் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு பகல் 12.15 மணி அளவில் விஜயேந்திரர் அங்கிருந்து சென்றார்.