கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:06 AM GMT (Updated: 23 Feb 2021 3:06 AM GMT)

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஈரோடு,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பொதுமக்கள் குறைகேட்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருப்பது பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு ஆகும். மத்திய அரசாங்கம் தினந்தோறும் மக்களுக்கு சாட்டையடி தண்டனை தருவதைப் போல பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்திக் கொண்டு வருகிறது. மத்திய - மாநில அரசு போடும் வரிகளின் காரணமாகத்தான் இந்தளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசின் வரி என்பது ரூ.10.39 ஆக இருந்தது. இப்போது ரூ.32.98 ஆக உள்ளது. மாநில அரசு போட்ட வரி என்பது 2014-ம் ஆண்டு ரூ.11.90 ஆக இருந்தது. இப்போது ரூ.19.90 ஆகிவிட்டது. டீசலைப் பொறுத்தவரை, மத்திய அரசு போட்ட வரி 2014-ம் ஆண்டு ரூ.4.50 ஆக இருந்தது. இன்று ரூ.31.83 ஆகிவிட்டது. மாநில அரசின் வரி 2014-ம் ஆண்டு ரூ.6.61 ஆக இருந்தது. இப்போது ரூ.11.22 ஆக இருக்கிறது.

இப்படி எல்லாமே பல மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது, பெட்ரோல், டீசல் விலை என்பது கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்தது அல்ல. அது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத குணாம்சத்தைப் பொறுத்ததாக உள்ளதை உணர முடிகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது!

இதனுடைய விலை உயரும் போது விலைவாசி உயர்கிறது. அதாவது உயர் வகுப்பினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என அனைவரையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு அதிகப்படியான வரியைப் போட்டு இதன் விலையைக் கூட்டிவரும் பிரதமர் நரேந்திர மோடி, இதற்குக் காரணம் மன்மோகன்சிங்தான் என்று குற்றம் சாட்டுகிறார்.

இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு முந்தைய அரசாங்கத்தையே குறை சொல்வீர்கள்? 2014-ம் ஆண்டு முதல் அதாவது, 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி, இன்னமும் முந்தைய ஆட்சியையே குறை சொல்கிறது என்றால் என்ன அர்த்தம்? இவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்று அர்த்தம்?. இந்த விலை உயர்வுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல பழனிசாமி நடமாடி வருகிறார். பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசு மட்டும்தான் காரணம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பழனிசாமி அரசும்தான் காரணம். இன்னும் சொன்னால் பெட்ரோல், டீசல் விலை இந்தளவுக்கு உயர்ந்ததற்கு காரணமே பழனிசாமிதான்.

2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் இருந்தது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். 2 முறை தமிழக அரசின் வரியை குறைத்தார். அசாம் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசு வரியைக் குறைத்து, லிட்டருக்கு ரூ.5 பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இதேபோல் பெட்ரோல் விலை முன்பு உயர்ந்த போது கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வரியைக் குறைத்தார். அதன்மூலம் பெட்ரோல் - டீசல் விலையையும் குறைத்தார். ஆகவே பழனிசாமியும், கொரோனா காலத்தில் அவரே உயர்த்திய வரியையாவது இப்போது குறைத்து, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் தேர்தல் அறிவிப்புக்கு இதையும் சேர்த்துச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு, மு.க.ஸ்டாலின் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் - மேச்சேரி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

காவிரி நதியில் நம்முடைய உரிமை பறிபோனதற்கு காரணமே எடப்பாடி பழனிசாமிதான் என்று அப்போது மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.

Next Story