மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு உத்தரவு + "||" + Wage increase for ration shop employees - Government of Tamil Nadu order

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு உத்தரவு
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சென்னை,

பொது வினியோகத் திட்டம், கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து ஆணையிடுகிறது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் கூட்டுறவு ரேஷன் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு ஆண்டு மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியமான ரூ.5 ஆயிரம் என்பதில் இருந்து, ரூ.6,250 ஆகவும், கட்டுனர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியமான ரூ.4,250 என்பதில் இருந்து ரூ.5,500 ஆகவும் மாற்றியமைத்து வழங்கப்படும்.

ஒராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு ரூ.8,600 முதல் ரூ.29 ஆயிரம் வரையும், கட்டுனர்களுக்கு ரூ.7,800 முதல் ரூ.26 ஆயிரம் வரையும் காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

பணியில் ஒரு ஆண்டு முடித்தவர்களுக்கு தற்போதுள்ள அடிப்படை ஊதியத்துடன் 100 சதவீதம் அகவிலைப்படியை சேர்த்து வரும் கூடுதலுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கி, அந்த தொகையை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

அகவிலைப்படி புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். ஆண்டு ஊதிய உயர்வு அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ஆயிரம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது ஆயிரம் ரூபாய் மற்றும் ரூ.800 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

நகர ஈட்டுப்படி அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.600 மற்றும் ரூ.500 இவற்றில் எது குறைவோ அதனை வழங்கலாம். இதர மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அல்லது முறையே ரூ.500 மற்றும் ரூ.400 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைப்படுத்தி அதன் பணப்பயன் வழங்கப்படும். புதிய ஊதிய விகிதத்தினை அமல்படுத்துவதனால் ஏற்படும் செலவினத்தை கூட்டுறவுத்துறையே ஏற்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.