தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 25-வது கட்ட விசாரணை - வருவாய்த்துறை ஊழியர்களிடம் நடந்தது


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 25-வது கட்ட விசாரணை - வருவாய்த்துறை ஊழியர்களிடம் நடந்தது
x
தினத்தந்தி 23 Feb 2021 4:57 AM GMT (Updated: 23 Feb 2021 4:57 AM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 25-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில் வருவாய்த்துறை ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம்22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி ஏற்கனவே 24 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் 616 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 850 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.

25-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது.

இந்த விசாரணையில் சம்பவத்தின்போது, அரசு ஊழியர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதில் வாகனங்களை இழந்த வருவாய்த்துறை ஊழியர்கள் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று 21 பேர் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி நேற்று மொத்தம் 14 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த விசாரணை வருகிற26-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story