மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு - தடுப்பு கம்பிகள் உடைந்ததால் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு - தடுப்பு கம்பிகள் உடைந்ததால் குளிக்க தடை
x
தினத்தந்தி 23 Feb 2021 5:13 AM GMT (Updated: 23 Feb 2021 5:13 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. அப்போது பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கம்பிகள் உடைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் இங்கு வருவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 10 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்கலாம்.

இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 20-ந் தேதி பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், நேற்று காலை மெயின் அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தன. மதியத்திற்கு பிறகு நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் தடுப்பு கம்பிகள் உடைந்து பெண்கள் குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் யாரையும் போலீசார் குளிக்க அனுமதிக்கவில்லை.

தடுப்பு கம்பிகள் சரிசெய்யப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் மெயின் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளித்து சென்றனர். வழக்கம்போல குற்றாலம் அருவிகளில் இரவு நேரத்திலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story