மாநில செய்திகள்

ராமேசுவரத்துக்கு 2 அதிவேக ரோந்து படகுகள் வந்தன + "||" + 2 high speed patrol boats came to Rameswaram

ராமேசுவரத்துக்கு 2 அதிவேக ரோந்து படகுகள் வந்தன

ராமேசுவரத்துக்கு 2 அதிவேக ரோந்து படகுகள் வந்தன
மன்னார் வளைகுடா கடல் பகுதி ரோந்துக்காக ராமேசுவரத்துக்கு 2 அதிவேக படகுகள் நேற்று வந்தன.
ராமேசுவரம், 

தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியாக உள்ளது. அதற்கு இலங்கை மிக அருகாமையில் உள்ளதோடு, அவ்வப்போது ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருவதே காரணம்.

இதேபோல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டி ராமேசுவரம் வழியாக தமிழகத்துக்கு கடத்தப்படுவதும் நடக்கிறது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாகவே கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை முழுமையாக தடுக்கும் பொருட்டும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாகவும் ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமுக்கு புதிதாக 2 அதிவேக ரோந்து படகுகள் வந்துள்ளன. நேற்று அந்த படகுகள் பாம்பன் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து குந்துகால் பகுதியில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு 2 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த 2 படகுகளிலும் 10 வீரர்கள் வரை செல்லலாம். மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த அதிவேக படகில் இருந்தபடி, கடலில் தொலைதூரத்தில் வரும் படகுகளையும் கண்காணிக்கும் வகையில் அதிநவீன ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன” என்று கூறினார்.