தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் உடையும் - மதுரையில் எல்.முருகன் பேட்டி


தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் உடையும் - மதுரையில் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2021 5:56 AM GMT (Updated: 23 Feb 2021 5:56 AM GMT)

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் உடையும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் சாலை பகுதியில் பா.ஜ.க. சார்பில் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. சார்பில் 234 தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். காங்கிரஸ் இல்லா பாரதம் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையோடு அமித்ஷாவின் தலைமையில் பா.ஜ.க. தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. அதில் இந்தியா முழுவதிலும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது தென் மாநிலத்தில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தன் மூலம் வெற்றியை தொடங்கியுள்ளோம். நாராயணசாமியின் இயலாமையால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளது.

மு.க. ஸ்டாலின் தி.மு.க.வை நடத்துவது கட்சி நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லை. கூட்டணி பேதமின்றி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது உலகநாடுகள் பிரச்சனை. அதனை குறைக்க வழிவகை செய்வோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஊதி பெரிதாக்குகின்றனர். அது கடந்த ஆட்சியில் இருந்தது போல நிலை தான் உள்ளது.

ராகுல் செல்லும் இடங்களிலெல்லாம் இனி தோல்வி தான். வரும் 25-ம் தேதி கோவையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. வேளாண் சட்டத்தை முன் மொழிந்ததே காங்கிரஸ் தான். எடப்பாடி பழனிசாமி செயல்படுத்த உள்ளதை முன்னரே தெரிந்து ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் உடையும், அதற்கான சாத்திய கூறு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story