வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2021 6:19 AM GMT (Updated: 23 Feb 2021 6:19 AM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

திருப்பூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட விவசாய பிரிவு சார்பில் 2 ஆயிரத்து 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கோல்டன்நகர் கொடிக்கம்பம் பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கலைமகள் எம்.கோபால்சாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சிவசாமி, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

வார்டு செயலாளர் குமார் வரவேற்று பேசினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு 2 ஆயிரத்து 73 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் சட்டை, தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முன்பை விட தற்போது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏழை, எளியவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பெற வேண்டும் என எந்த திட்டத்தை செய்தாலும், அதனை மு.க.ஸ்டாலின் தான் சொல்லி செய்வதாக கூறி வருகிறார். மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இருந்த போது மக்கள் பயன்பெறும் திட்டங்களை செய்திருந்தால், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் செய்ய வேண்டிய நிலை இருக்காது. மக்களுக்கான ஆட்சியை அ.தி.மு.க. கொடுத்து வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.12 ஆயிரத்து 500 கோடி கடன் தள்ளுபடி மற்றும் மும்முனை மின்சாரம் போன்ற திட்டங்கள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விவசாயிகள் விரும்பும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனவே ஜெயலலிதாவின் விருப்பப்படி அவருக்கு பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.

இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ஜான், பகுதி செயலாளர் ஹரிகரசுதன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகசாமி, பி.கே.முத்து, அ.தி.மு.க. நிர்வாகி மார்க்கெட் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சுரேந்தர் நன்றி கூறினார்.

Next Story