அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு: பிறக்கும் குழந்தையின் மீதும் ரூ.62 ஆயிரம் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தியிருக்கிறது மு.க.ஸ்டாலின் கண்டனம்


அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு: பிறக்கும் குழந்தையின் மீதும் ரூ.62 ஆயிரம் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தியிருக்கிறது மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 24 Feb 2021 2:53 AM GMT (Updated: 24 Feb 2021 2:53 AM GMT)

‘‘அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை காரணமாக தமிழக அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்திருக்கிறது. இதனால் பிறக்கும் குழந்தையின் மீதும் ரூ.62 ஆயிரத்துக்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி இருக்கிறது’’ என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழக மக்கள் தலையில் ரூ.5.70 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

6-வது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி, பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது தி.மு.க. ஆட்சி. ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உருவாக்கி விட்டார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை காரணமாக கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும், ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரத்துக்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.

பெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்கு கிடைத்த ரூ.87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். வேலைவாய்ப்பும் இல்லை, தொழிற்சாலையும் இல்லை என்பதை விட மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னுக்கு இருக்கிறது.

தமிழக மக்களின் பேராதரவுடன், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் நிதி நிலைமை தமிழக மக்களுக்காக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story