பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 3:21 AM GMT (Updated: 24 Feb 2021 3:21 AM GMT)

ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர்.

சென்னை,

போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு ஆகிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அடிப்படையான போக்குவரத்து தேவையை நிறைவேற்றும் போக்குவரத்து கழகங்கள் சேவைத்துறையாக செயல்படும் காரணத்தால் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருகிறது. போக்குவரத்து கழகங்களின் இழப்புகளை அரசாங்கம் ஈடுகட்ட வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

ஆனால், அரசு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குவது இல்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்து போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் ரூ.8 ஆயிரம் கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு கால பலன்கள் ஓய்வு பெறும் நாளன்று வழங்கப்படுவது இல்லை.

எனவே, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். தொழிலாளர்களின் நிலுவைகள் சட்டப்பூர்வமான ஒப்பந்தப்படியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 3 நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

அப்போது, ஊழியர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் தொழிலாளர்களின் சேமிப்பு பணம் உரிய கணக்கில் செலுத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் பிரச்சினை தீரவில்லை. மேலும், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 01.09.2019 அன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

எனவே, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி (நாளை) முதல் வேலைநிறுத்தம் செய்வது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story