மாநில செய்திகள்

குளத்தில் மூழ்கி மகள், மகனுடன் டிரைவர் சாவு + "||" + Driver dies with daughter, son drowning in pool

குளத்தில் மூழ்கி மகள், மகனுடன் டிரைவர் சாவு

குளத்தில் மூழ்கி மகள், மகனுடன் டிரைவர் சாவு
குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் தண்ணீரில் மூழ்கி மகள், மகனுடன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை,

மதுரை திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 35), லாரி டிரைவர். இவருடைய மனைவி தனலட்சுமி (30). இவர்களுடைய மகள்கள் சங்கீதா (10), யோகேசுவரி (7). மகன் மகாமுகேஷ் (4).

நேற்று காலை தனலட்சுமி அருகில் உள்ள ஒரு கல்குவாரி வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் அழகர்சாமி தன்னுடைய மகள்கள், மகனுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.

அங்கு அழகர்சாமி துணி துவைத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்தார். தந்தையை காணவில்லை என தேடி, குழந்தைகள் வந்தபோது, அவர்களும் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தனர்.

இதில் யோகேசுவரி மட்டும் மேலே நின்றிருந்தாள். தனது அக்காளும், தம்பியும் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை பார்த்து அலறினாள். அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் ஓடிச் சென்று கூறினாள்.

உடனே, அங்கு 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள், ஓடி வந்து சிறுவன் மகாமுகேஷ், சிறுமி சங்கீதாவையும், அழகர்சாமியையும் மீட்டு உடனடியாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மகாமுகேஷ், சங்கீதா ஆகியோரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.