சசிகலா, அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்


சசிகலா, அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Feb 2021 4:06 AM GMT (Updated: 24 Feb 2021 4:06 AM GMT)

சசிகலா, அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று சென்னை வந்தார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவே வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனவே, விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். வேளாண் திருத்த சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்கள். எனவே, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இந்திய குடியரசு கட்சிக்கு இந்த தேர்தலில் 3 அல்லது 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்பேன்.

இந்த தேர்தலில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில தலைவர் எம்.ஏ.சூசை உடன் இருந்தார்.

முன்னதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, பி.எஸ்.என்.எல்., ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

Next Story