அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Feb 2021 4:45 AM GMT (Updated: 24 Feb 2021 4:45 AM GMT)

அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை,

எரிசக்தித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை-3-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொலிக்காட்சி மூலமாக கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதேபோல எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கருணை ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 9 ஓய்வு பெற்றதொடக்கவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப்பணியாளர்களுக்கு ஓய்வூதிய அட்டைகளைவழங்கி தொடங்கிவைத்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒட்டன்சத்திரம், தாராபுரம், காங்கேயம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டங்களுக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் சாலையினை ரூ.713 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக்காட்சி மூலமாக எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், ரூ.362 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 பாலங்கள் மற்றும் 2 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1,115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 4 சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘‘நாடு போற்றும் நான்காண்டு சாதனைகள்’’ என்ற சாதனை மலர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), முதல்-அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு மற்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தொகுப்பு ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.6 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலமாக எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் விருதுநகர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டிடம் மற்றும் 11 பாலங்கள் ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் ரூ.5 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ இணையவழிச் சேவை மூலம் தானியங்கி முறையிலான பட்டா மாற்றம் செய்யும் வசதி மற்றும் ஜெயலலிதா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, பா.பென்ஜமின், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஜி. பாஸ்கரன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் ரூ.2,181 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Next Story