தமிழக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் அரசியல் களம் , சசிகலாவுடன் சரத்குமார், சீமான் சந்திப்பு


தமிழக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் அரசியல் களம் , சசிகலாவுடன் சரத்குமார், சீமான் சந்திப்பு
x
தினத்தந்தி 24 Feb 2021 12:13 PM GMT (Updated: 24 Feb 2021 12:13 PM GMT)

சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

சென்னை

சசிகலா தமிழகம் திரும்பிய நிலையில் இன்று பொதுவெளிக்கு வந்து பேட்டி அளித்தார். இந்நிலையில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரம் காட்டி வருகிறன. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் அதிமுக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதிலும் தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சியை கூட்டணியில் அதிமுக இணைக்குமா? என்கிற அளவுக்கு ஒவ்வொருவரும் அளிக்கும் பேட்டிகள் வெளிப்படுத்துகிறன.

கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் போட்டி என பிரேமலதா பேட்டி அளித்து  இருந்தார்.

இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் இன்று சசிகலா ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு சசிகலா இனிப்புகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

என்னுடைய அக்கா புரட்சி தலைவியின் 73-வது பிறந்த நாளையொட்டி இங்கு வந்துள்ள கழக உடன்பிறப்புகள், பொது மக்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க உள்ளேன். 

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்துமீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு சசிகலா பேசினார்.

 சசிகலாவைக் காண அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் வந்து சசிகலாவைச் சந்தித்தார். அதே போன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்,இயக்குனர் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து பேசினர்.

சசிகலாவை சந்தித்த பின்  பேட்டி அளித்த சரத்குமார்  சசிகலாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தேன். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும் போது சசிகலா உடனிருந்தார் என கூறினார்.

சசிகலாவுடனான  சந்திப்புக்கு பிறகு உடன்பிறவா சகோதரியை பார்த்து  உடல் நலம் விசாரித்தோம்  என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

Next Story