சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 25 Feb 2021 12:29 AM GMT (Updated: 25 Feb 2021 12:29 AM GMT)

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அருங்காட்சியகம் திறப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார். அங்குள்ள ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்றனர்.

பின்னர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அம்சங்களை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். சமாதியில் மலர் வளையம் வைத்த முதல்-அமைச்சர், அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

மெழுகு சிலை

ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகத்தில் நுழைந்ததும், ஜெயலலிதா எதிரில் நிற்பதுபோல் தோற்றமளிக்கும் வகையில் அவரது முழு உருவ மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அரக்கு நிற சேலை, வெள்ளை நிற ஷூ அணிந்தபடி இந்த சிலை காட்சி அளிக்கிறது. அதைத்தொடர்ந்து சிறு வயது முதல் இறுதி காலம் வரையிலான ஜெயலலிதாவின் 10 ‘கட்-அவுட்’டுகள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன.

அதன் எதிரே அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான 20-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், பட விளக்கத்துடன் வைக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து அம்மாவின் சாதனை மைல் கற்கள் என்ற பகுதியில் தொடுதிரை கணினி வைக்கப்பட்டுள்ளது.

அதில், 1991-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க.வின் 4 ஆட்சி காலத்திலும் ஜெயலலிதா நிகழ்த்திய சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள், செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் ‘மோஷன் கிராபிக்ஸ்’ படங்களாக வைக்கப்பட்டுள்ளன. காண விரும்பும் சாதனையின் தலைப்பை தொட்டால், அதைப்பற்றிய ‘கிராபிக்ஸ்’ படம் சில நிமிடங்கள் திரையில் ஓடுகிறது.

ஒலி-ஒளி விளக்கப்படம்

அதைத்தொடர்ந்து அம்மாவுடன் உரையாடல் என்ற அரங்கம் வருகிறது. அதில், உள்ள தொடு திரையில் 10 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ‘ஐ.நா. சபையில் பாராட்டப்பட்ட உங்கள் திட்டம் எது?’ என்ற கேள்வியை தொட்டவுடன், எதிரே இருக்கும் பெரிய திரையில் ஜெயலலிதாவின் ஆளுயர மெய்நிகர் பிம்பம் தோன்றுகிறது. அந்த கேள்விக்கான பதிலை (சட்டசபையில் அல்லது மேடைகளின் ஏற்கனவே பேசிய பேச்சின் பகுதி) ஜெயலலிதாவின் பிம்பம் பேசுவது போன்றே வாயசைத்து உச்சரிக்கிறது.

அடுத்ததாக, சாதனை சொல்லும் சுவரோவியம் என்ற அரங்கில், மழைநீர் சேகரிப்புத் திட்டம் உள்ளிட்ட 6 திட்டங்கள் பற்றிய விளக்கங்களை கொண்ட தொடுதிரையுள்ள சுவர் போன்ற திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்களின் தலைப்பு, சுவரில் காட்டப்படுகிறது. பார்க்க விரும்பும் திட்டத்தின் தலைப்பை தொட்டதும் அது பற்றிய முழு ஒளி-ஒலி விளக்கப்படம் ஓடுகிறது.

‘செல்பி வித்’ அம்மா

அறிவுசார் பூங்காவின் முதல் அரங்கில், ஜெயலலிதாவின் சிறு வயது வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, அரசியலில் அவரது ஆரம்பகட்ட வாழ்க்கை ஆகியவை தனித்தனி ‘பட்டன்’களாக வைக்கப்பட்டுள்ளன. அதைத்தொட்டதும், படங்களுடன் கூடிய சுருக்கமான வரலாறு 70 நொடிகள் திரையில் ஓடுகிறது. இதில், சில அரிய புகைப்படங்கள், வெளிவராத அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

‘செல்பி வித்’ அம்மா என்ற அரங்கில், திரையில் ஜெயலலிதாவின் படம் அவர் நிற்பதுபோல தோன்றுகிறது. அங்கு போடப்பட்டுள்ள கட்டத்தில் நின்றவுடன் தானியங்கி முறையில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. பின்னர் அங்கிருக்கும் கணினியில் புகைப்படம் எடுத்தவரின் செல்போன் நம்பரை பதிவு செய்தால், ஜெயலலிதாவுடன் செல்பி எடுத்ததுபோன புகைப்படம் 5 நிமிடங்களுக்குள் செல்போனுக்கு வந்துவிடுகிறது.

மலரஞ்சலி

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் வகையில் திரை வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள அரங்கம் ஒன்றில் 100 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மிகப் பெரிய திரை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பங்கேற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் எதையாவது குறிப்பிட்டு கேட்டால், அதன் வீடியோ திரையிட்டு காட்டப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா, விரைவில் மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

 


Next Story