ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Feb 2021 12:56 AM GMT (Updated: 25 Feb 2021 12:56 AM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

73 லட்சம் மரக்கன்றுகள்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் சார்பில் தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஊத்துக்கோட்டை மாணவிக்கு பாராட்டு

மேலும் விழாவில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான மாநில விருது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி வேலாகாபுரம் அருகே உள்ள மேட்டுக்காலனியைச் சேர்ந்த தே.நர்மதா என்ற மாணவிக்கு வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவருடைய சிலைக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

இதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேக், அன்னதானம்

தொடர்ச்சியாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன்உசேன் ஏற்பாட்டில், ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி 73 கிலோ எடை கொண்ட கேக் செய்யப்பட்டு இருந்தது. அதனை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வெட்டி, ஒருவருக்கொருவர் மாறி, மாறி ஊட்டி மகிழ்ந்தனர்.

அதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், நடந்த மருத்துவ முகாமையும், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, இணை செயலாளர் சிவராஜ் ஏற்பாட்டில் நடந்த அன்னதான நிகழ்ச்சியையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து தொடங்கி வைத்து, பார்வையிட்டனர்.

எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் சென்னை தியாகராயநகர், பனகல் பார்க் அருகில் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் 2 ஆயிரம் பெண்களுக்கு குடும்பத்திற்கு தேவையான சமையல் பாத்திரங்கள், மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன. அதனையடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.


Next Story