பிரதமர் மோடி இன்று கோவை வருகை


பிரதமர் மோடி இன்று கோவை வருகை
x
தினத்தந்தி 25 Feb 2021 2:14 AM GMT (Updated: 25 Feb 2021 2:15 AM GMT)

தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

கோவை,

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பிரதமர் நரேந்திரமோடி இன்று (வியாழக்கிழமை) கோவை வருகிறார். இதற்காக காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் மோடி, காலை 10.25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார்.

அதன்பின்னர் கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார். அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.

இது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி அலகுகளும் தலா 500 மெகாவாட் திறன் கொண்டவை. ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கோவை, மதுரை,தூத்துக்குடி உள்பட 9 'ஸ்மார்ட்' நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணியளவில் காரில் கொடிசியா அரங்குக்கு அருகில் உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பாரதீய ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமானநிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Next Story