சசிகலாவை சந்தித்த முதல் எம்.எல்.ஏ


சசிகலாவை சந்தித்த முதல் எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 25 Feb 2021 1:48 PM GMT (Updated: 25 Feb 2021 1:48 PM GMT)

சசிகலாவை இன்று எம்.எல்.ஏ தனியரசு , இயக்குனர் லிங்குசாமி - நடிகர் பிரபு ஆகியோர் சந்தித்தனர்

சென்னை

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் சசிகலாவை நேற்றிலிருந்து ஒரு சில அரசியல்கட்சித் தலைவர்கள்,  சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர்  நேற்று சந்தித்தனர்.

சசிகலா விடுதலைக்குப் பின்னர் இதுவரை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் நேரடியாக சென்று சந்திக்காத நிலையில் முதல்நபராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் எம்.எல்.ஏ தனியரசு சசிகலாவை இன்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக - பாஜக-வுக்கு இடையே இருக்கும் உறவு அதிமுக-வின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். நிர்வாக ரீதியாக பாஜக-வோடு உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை ஆனால் அத்தனை திட்டங்களை தொடங்கி வைக்கவும் மோடி, அமித்ஷா என பாஜக-வினரை அழைக்கின்றனர். அது அதிமுக நற்பெயரை கெடுத்துவிடும்.

அதிமுக - அமமுக ஒற்றிணையவேண்டும். அந்த நற்செய்தி விரைவில் வரும் என எதிர்பார்கிறேன்.ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்திருக்கிறார் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு இருந்த அதே மன உறுதியுடன் நலமுடன் இருக்கிறார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக உள்ளது ஆனால் கட்சி ரீதியில் குளறுபடிகள் உள்ளன.

ஒருவேளை அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமில்லாமல் போனால்  இறுதி கட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யாருக்கு ஆதரவு என்பது குறித்து நல்ல முடிவு எடுக்கும்.” என கூறினார்,

சசிகலாவை இன்று  இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் பிரபு ஆகியோரும் சந்தித்தனர்.

Next Story