தமிழக சட்டமன்ற தேர்தல்: தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது; முதல்கட்ட கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை


தமிழக சட்டமன்ற தேர்தல்: தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது; முதல்கட்ட கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை
x
தினத்தந்தி 25 Feb 2021 11:11 PM GMT (Updated: 25 Feb 2021 11:11 PM GMT)

தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்ட கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே மீண்டும் பேசுவோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

தி.மு.க. தரப்பில் பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் மேலிட பார்வையாளர் உம்மன் சாண்டி, அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

உடன்பாடு ஏற்படவில்லை

காலை 10.10 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் காங்கிரஸ் குழுவினர், ‘கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே அதே எண்ணிக்கை அடிப்படையில் தற்போதும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய கட்சியான எங்களுக்கு கூட்டணியில் உரிய அங்கீகாரம், பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ‘தி.மு.க.வினர் அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். எனவே இந்த முறை உங்கள் கட்சிக்கு (காங்கிரஸ்) அதிகபட்சம் 20 முதல் 25 தொகுதிகள்தான் ஒதுக்கீடு செய்ய முடியும்’ என்று தி.மு.க. குழுவினர் கூறியதாக தெரிகிறது. இதனை காங்கிரஸ் தரப்பினர் ஏற்க மறுத்துவிட்டதால், முதல்கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் ஏற்படாமல் முடிவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை 50 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

கே.எஸ்.அழகிரி பேட்டி

பேச்சுவார்த்தை முடிவடைந்தவுடன், அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர்களுடன் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து நல்ல முறையில் பேசினோம். மகிழ்ச்சிகரமாக பேசினோம். எங்களுடைய கருத்தை நாங்கள் சொன்னோம். அவர்களுடைய கருத்தை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் இரண்டு தரப்புமே மேலும் அவரவர் கட்சியோடு கலந்துபேசி அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விவரம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து விளக்கியதாக கூறப்படுகிறது.


Next Story