டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்து விட்டார்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்து விட்டார்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Feb 2021 11:41 PM GMT (Updated: 25 Feb 2021 11:41 PM GMT)

தேர்தலுக்கு முன் பணிகளை நிறைவேற்ற முடியாது என்று அறிந்திருந்தும் டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்து விட்டார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை தமது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

அவசர கோலம்

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. அதனால், அ.தி.மு.க. அரசு அவசரகோலத்தில், அலங்கோலமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சட்டமன்றம் அவர்களது சத்தமன்றமாகவே மாறிவிட்டதால், மக்களாகிய உங்களிடம் சில கருத்துகளைப் பேசுவதற்கான காணொலிதான் இது. தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி.

இத்தகைய ஆட்சி தனது அந்திமக் காலத்தில் ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையை கொடுத்திருக்கிறது. இதை பார்த்து நிதிநிலையின் கவலைக்கிடமான அறிக்கை என்றுதான் சொல்ல முடியும். கடன் வாங்கி கடன் வாங்கி, தமிழ்நாட்டின் கடன் தொகையை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக ஆக்கிய கடனாளி அரசு தான் இந்த எடப்பாடி பழனிசாமி அரசு.

பினாமிகளுக்கு...

தி.மு.க. ஆட்சியில் 438.78 கோடி ரூபாய் உபரி வருவாயுடன் நிதி நிலை அறிக்கையை விட்டுச்சென்றோம். ஆனால் இன்று வருவாய் பற்றாக்குறை 41,417 கோடி ரூபாய். இதற்கு எதற்காக ஒரு நிதிநிலை அறிக்கை? தேவையா?. கடன், நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை - இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் நிதி மேலாண்மை. கடன் 500 சதவீதம் அதிகரித்து விட்டது. இந்த நிமிடம் பிறக்கப் போகும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனை சுமத்தியுள்ளது அ.தி.மு.க. அரசு.

கடன் வாங்கி, ஏதாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. டெண்டர்களை விட்டு, அந்தப் பணத்தை தனது பினாமிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக இருந்துள்ளது.

கஜானா காலி

தேர்தலுக்காகவே அறிவிப்புகளை வெளியிடுகிறார். துவக்க விழா நடத்துகிறார் என்று நான் குற்றம் சாட்டினேன். அதை இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை நிரூபித்து விட்டது. நிதி மேலாண்மையில் வரலாறு காணாத தோல்வி அடைந்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்-அமைச்சர்.

கரும்புள்ளி

தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதி அமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் - அ.தி.மு.க. ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கவலைக்கிடமான முறையில் ஒரு நிதிநிலை அறிக்கையை வாசிப்பதை விட பன்னீர்செல்வம் சும்மா இருந்திருக்கலாம். ஆட்சி செய்யத் தெரியாவதர்களிடம் ஆட்சியும், நிர்வாகம் செய்யத் தகுதியில்லாதவர்களிடம் நிர்வாகமும் போனால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்த நிதிநிலை அறிக்கை. தாங்கள் வேஸ்ட் என்பதை அவர்களே நாட்டுக்குச் சொல்லிவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story