குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வெற்றுக்காகிதத்தில் ரஜினிகாந்த் பெயரை பைனான்சியர் எழுதிக்கொண்டார்; ஐகோர்ட்டில், கஸ்தூரிராஜா தரப்பு குற்றச்சாட்டு


குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வெற்றுக்காகிதத்தில் ரஜினிகாந்த் பெயரை பைனான்சியர் எழுதிக்கொண்டார்; ஐகோர்ட்டில், கஸ்தூரிராஜா தரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Feb 2021 4:59 AM GMT (Updated: 26 Feb 2021 4:59 AM GMT)

குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த, ரஜினிகாந்த் பெயரை வெற்று காகிதத்தில் பைனான்சியர் போத்ரா எழுதிக்கொண்டதாக ஐகோர்ட்டில் கஸ்தூரி ராஜா தரப்பு வக்கீல் பரபரப்பு குற்றம் சாட்டி வாதிட்டார்.

ரஜினிகாந்த் தருவார்
சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால், தன் சம்பந்தியான ரஜினிகாந்த் தருவார் என்று கடிதம் எழுதிக்கொடுத்தார். தற்போது, அவர் கொடுத்த பணத்தை தரவில்லை. அதனால், தன் பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜா மீது ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இருவரும் சேர்ந்து என்னை ஏமாற்றியதாக அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார், கடந்த 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், போத்ராவுக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதமும்) விதித்தார். இதை எதிர்த்து போத்ரா, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். போத்ரா இறந்து விட்டதால், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார்.

வெற்று காகிதம்
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடன் தொகையை திருப்பிக்கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து கூறி இருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரிராஜா சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ‘‘கஸ்தூரிராஜா ரூ.10 லட்சம் கடன்வாங்கியிருந்தார். அதை வட்டியுடன் திருப்பியும் கொடுத்து விட்டார். கடன் வாங்கியபோது கையெழுத்து போட்டு கொடுத்த வெற்று காகிதத்தை போத்ரா திருப்பித்தரவில்லை. பலமுறை திருப்பிக்கேட்டும் தராத போத்ரா, அதில் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றால், சம்பந்தி ரஜினிகாந்த் திருப்பித்தருவார் என்று அவரே எழுதிக்கொண்டு, கஸ்தூரிராஜா எழுதிக் கொடுத்ததாக பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளார். இதை போலீஸ் விசாரணையிலும், செக் மோசடி வழக்கின் குறுக்கு விசாரணையிலும் போத்ராவே ஒப்புக்கொண்டுள்ளார்’’ என்று வாதிட்டார்.

குடும்பத்தில் குழப்பம்
மேலும் தன் வாதத்தில், ‘‘இதுகுறித்து போத்ராவுக்கு எதிராக கஸ்தூரிராஜா தனியாக வழக்கு தொடர்ந்துள்ளார். கடன் கொடுக்கும்போது வெற்றுக்காகிதத்தில், பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அதில் இதுபோல் ஏதாவது பரபரப்பாக எழுதி, சினிமா பிரபலங்களை மிரட்டுவது போத்ராவின் வழக்கம். நடிகை ரோஜா முதல் பல பிரபலங்களை இப்படித்தான் மிரட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கஸ்தூரிராஜாவின் சம்பந்தி என்றாலும், சினிமா தொடர்பான தொழில்களில் எந்த தொடர்பையும் ரஜினிகாந்துடன் கஸ்தூரி ராஜா வைத்துக்கொள்வது இல்லை. ரஜினிகாந்தின் பெயரையும் 
பயன்படுத்தியது கிடையாது. ஆனால், குடும்ப உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரஜினிகாந்த் உத்தரவாதம் என்று வெற்றுக்காகிதத்தில் எழுதி வழக்கு தொடர்ந்துள்ளார்’’ என்று வக்கீல் கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் பிரபல இயக்குனர். இளைய மகன் முன்னணி நடிகர். அப்படி இருக்கும்போது, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினாரா?’’ என்று கேட்டனர்.

ரொக்கப்பணம்
அதற்கு பதில் அளித்த வக்கீல் காஜா மொய்தீர் ஹிஸ்தி, ‘‘சினிமாவை பொருத்தவரை கோடீஸ்வரராக இருந்தாலும், திடீரென ரூ.5 லட்சம் கூட இல்லாமல் கடன் வாங்குவது வழக்கம்தான்’’ என்று விளக்கம் அளித்தார்.இதையடுத்து, ‘‘ரூ.65 லட்சம் எப்படி கொடுக்கப்பட்டது?’’ என்று மனுதாரர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ககன்போத்ரா, ‘ரொக்கமாக வழங்கப்பட்டது' என்றார். ‘‘சட்டப்படி ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யக்கூடாது. அப்படியிருக்கும்போது, ரூ.65 லட்சத்தை ரொக்கமாக எப்படி கொடுத்தீர்கள்?’’ என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர். உடனே, ‘‘சினிமாத்துறையினர் உடனே பணம் வேண்டும் என்று கடன் கேட்கும்போது, இதுபோல ரொக்கமாக பணம் கொடுப்பது வழக்கம்’’ என்று ககன் போத்ரா விளக்கம் அளித்தார்.

வருமான வரி கணக்கு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘கஸ்தூரிராஜாவுக்கு ரூ.65 லட்சம் எப்படி கொடுக்கப்பட்டது? கடன் கொடுத்த ஆண்டில் போத்ரா தாக்கல் செய்ய வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என்று மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற மார்ச் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story