மு.க.ஸ்டாலின் சொன்னதால் கடன்களை ரத்து செய்யவில்லை: மக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த காலகட்டங்களில் அரசு உதவி செய்கிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி


மு.க.ஸ்டாலின் சொன்னதால் கடன்களை ரத்து செய்யவில்லை: மக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த காலகட்டங்களில் அரசு உதவி செய்கிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2021 6:31 AM GMT (Updated: 27 Feb 2021 6:31 AM GMT)

மக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த காலகட்டங்களில் அவர்களுக்கு அரசு உதவி செய்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் சொல்லித்தான் முதல்-அமைச்சர், கடன்களை ரத்து செய்வதாக பேசி வருகிறார். அது உண்மைக்குப் புறம்பான செய்தி. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிக்கென்று ஒரு கொள்கை வைத்துள்ளது. அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுவோம். ஆட்சியில் இல்லாத அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் அதைச் சிந்தித்து, கணக்கிட்டு, பிறகுதான் அதை அறிவிப்பாக வெளியிட முடியும். அந்த வகையில் எங்கள் அரசு இதைக் கணக்கிடுவதை அவர் தெரிந்து கொண்டு அப்படி பேசுகிறார். எந்தெந்த காலகட்டங்களில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று உணர்ந்து அந்தந்த காலகட்டங்களில் மக்களுக்கு அரசு உதவி செய்கிறது.

அரசுக்கு 5.70 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கித்தான் திட்டங்களை செயல்படுத்துகின்றன. எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. மக்களுக்கு பிரச்சினை வரும்போது மக்கள்தான் முக்கியம். தி.மு.க. ஆட்சியில் உலக வங்கியில் கடன் வாங்கித்தான் திட்டங்களை நிறைவேற்றினார்கள். விலைவாசி உயர்வினால் ஆண்டுக்காண்டு திட்டச் செலவு அதிகமாகும். அதனால்தான் கடன் கூடுதலாக வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நாங்கள் சொன்ன பிறகுதான் திட்டங்களை அரசு நிறைவேற்றுகிறது என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சொல்கிறார். விவசாயிகள் கடன் தள்ளுபடி என்று சொல்லிச் சென்றார்களே, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா? இல்லை, சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்களா? இல்லை. ஏதும் செய்யவில்லை. தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள். ஏனென்றால், அனைத்து கட்சியிலும் அவரவர்களின் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள்.

எங்களுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, அன்றைக்கு மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாங்கள் செயல்படுகிறோம்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுதான் இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறதாக கூறுகிறார்கள். தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

எங்கள் ஆட்சியின் மீது டெண்டர் விடுவதில் ஊழலென்றும், 40 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டரை கடைசி நேரத்தில் நான் வெளியிட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. நாங்கள் இ-டெண்டர் வெளியிடுகிறோம். தி.மு.க. ஆட்சியில் பாக்ஸ் டெண்டர் இருந்தது. இ-டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும். இது திறந்தவெளி ஒப்பந்தம். தி.மு.க.வில் அப்படியல்ல. யாருக்கு டெண்டர் விண்ணப்பம் கொடுக்கிறார்களோ அவர்கள்தான் அந்த பெட்டியில் அதை போட முடியும். அங்குதான் ஊழல் நடக்கிறது. இ-டெண்டரில் ஊழலுக்கு வாய்ப்பே கிடையாது.

டெண்டர் 40 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் உடனே அந்தத் தொகையை செலவு செய்வதில்லை. திட்டத்தின் மதிப்பை வைத்து அப்படி சொல்கிறார். ஒரே ஆண்டில் திட்டம் முடிந்துவிடாது. படிப்படியாகத்தான் திட்டம் நடைபெறும்.

பெரும்பாலான திட்டங்கள் உலக வங்கி மூலமாக நிறைவேறுகிற திட்டங்கள். அவர்கள் அனுமதித்த பிறகுதான் நாம் டெண்டர் கோருகிறோம். உலக வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் டெண்டர் விடமுடியும். அதில் எந்தவித ஊழலும் கிடையாது.

கவர்னரிடமும் என்மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அந்த டெண்டர் விட்டு ஒன்றரை ஆண்டுக்கு முன்னே ரத்து செய்துவிட்டார்கள். மீண்டும் முதலாவது மாதக் கடைசியில்தான் அந்த டெண்டரை 2-ஆகப் பிரித்து விட்டிருக்கிறார்கள். இன்னும் அந்த டெண்டரை அளிக்கவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை, வேலையும் செய்யவில்லை. ஆனால் அதில் நான் ஊழல் செய்திருக்கிறேன் என்று அவர் புகார் கூறியிருக்கிறார்.

சட்டமன்றம் கூட்டப்பட்டு பெரும்பான்மையை நிறைவேற்றுகிறபோது எதிர்க்கட்சிகள் எவ்வளவு அராஜகம் செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்துத்தான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். அதற்குப் பிறகு, எங்கள் கட்சியை உடைப்பதற்கு எவ்வளவு சதி செய்தார்கள், எங்களிடமிருந்து குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. தூண்டுதலின் பேரில் வெளியே சென்றார்கள். அதையும் முறியடித்து, சட்டமன்ற இடைத் தேர்தலிலும் நாங்கள் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற்று, சிறப்பாக 4 ஆண்டு காலம் நிறைவு பெற்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலே பிறந்த ஒருவர், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடுமையான வறட்சி. அதற்குப் பிறகு புயல் வந்தது. பின்னர் கொரோனா வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி செய்த அரசு எங்கள் அரசு.

காவல் துறை அதிகாரி மீதான பாலியல் புகார், விசாரணையில் இருக்கிறது. விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுவிட்டது. விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தபிறகுதான் அது உண்மையா? பொய்யா? என்று சொல்ல முடியும். விசாரணை முறையாக நடந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகாதா என்று கேட்கிறீர்கள். இளைஞர்களுடைய வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகத் தான் 2019-ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, 3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, 304 தொழில்கள் தமிழகத்தில் வருவதற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இதனால், நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும்.

இப்படி புதிய புதிய தொழில்கள் தமிழகத்திற்கு வரும்போது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் மட்டும் முழுவதுமாக வேலைவாய்ப்பு கொடுத்துவிட முடியாது. குறிப்பிட்ட அளவுதான் நாம் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story