மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை
x
தினத்தந்தி 27 Feb 2021 8:33 PM GMT (Updated: 27 Feb 2021 8:33 PM GMT)

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க.வினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
எனவே, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி மத்திய மந்திரிகள் அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வருகை தந்தார். அமித்ஷாவை வரவேற்க கூடியிருந்த பாஜகவினரை பார்த்து உற்சாகமாக அவர் கையசைத்தார்.

 மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரியின் காரைக்கால் மற்றும்  விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

அமித்ஷா வருகை குறித்து பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முதல் நிகழ்ச்சியாக, இன்று காலை 10.30 அளவில் காரைக்காலில் நடைபெறும் புதுச்சேரி பா.ஜ.க.வின் மையக்குழு கூட்டத்திலும், காலை 11.30 மணியளவில் காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில், காரைக்காலில் நடைபெறும் புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விழுப்புரம் வருகிறார்.

நான்காவது நிகழ்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பிற்பகல் 3.45 மணியளவில் நடைபெறும் தமிழக பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெறும் விஜய் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.இறுதியாக ஆறாவது நிகழ்ச்சியாக, அதே தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெறும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story