சென்னையில் ரெயில், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஆம்பூரை சேர்ந்தவரிடம் விசாரணை


சென்னையில் ரெயில், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஆம்பூரை சேர்ந்தவரிடம் விசாரணை
x
தினத்தந்தி 28 Feb 2021 1:44 AM GMT (Updated: 28 Feb 2021 1:44 AM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் மற்றும் விமான நிலையத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆம்பூரை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அந்த கடித்தை பிரித்து படித்து பார்த்த ரெயில்வே அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் ‘சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், டி.ஜி.பி அலுவலகம், சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம் ஆகிய 4 இடங்களில் வரும் மார்ச் 1-ந் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று அந்த கடிதத்தில் எழுந்திருந்தது.

இதையடுத்து கடிதம் குறித்த தகவலை, ரெயில்வே அதிகாரி தன்னுடைய உயர் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சென்டிரல் ரெயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம், தண்டவாளங்கள் என ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கொச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையம், டி.ஜி.பி. அலுவலகத்திற்கு கடிதத்தில் எழுதியிருந்ததை தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்த கடித்தத்தின் முகவரி மற்றும் பின்கோடு நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அதில் கடிதம் அனுப்பிய நபர் ஆம்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story