அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகப் போவதும் இல்லை - சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகப் போவதும் இல்லை - சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2021 2:37 AM GMT (Updated: 28 Feb 2021 2:37 AM GMT)

“அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகப் போவதுமில்லை” என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களாலும், அறிவித்துள்ள சமூக மேம்பாட்டு திட்டங்களாலும், மக்கள் பெருவாரியாக பயன்பெற்று அ.தி.மு.க. அரசுக்கு, செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவைக் கடன் ரூ.4.79 லட்சம் கோடி எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன் சுமத்தப்படுகிறது எனவும், முற்றிலும் தவறான வாதங்களை பொதுவெளியில் எதிர்க்கட்சித் தலைவரான, மு.க.ஸ்டாலின் எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராகி, இப்பேரவைக்கு அனுப்புவதே தொகுதிப் பிரச்சினையை இந்த மாமன்றத்தில் பேசுவதற்காகத்தான். ஆனால், . ஏதோ சுற்றுலாவிற்கு வருவதுபோல இந்த மாமன்றத்திற்கு தி.மு.க.வினர் வருகிறார்கள். இங்கே உட்கார்ந்து சிரிக்கிறார்கள், பேசுகிறார்கள். வெளிநடப்பு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பிறகுதான் பேரவைக்கு வருவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை அந்த அத்தை உருமாறி சித்தப்பா ஆகப்போவதும் இல்லை. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகப் போவதுமில்லை. தேர்தலில் படுதோல்வியை தி.மு.க. சந்திக்கப்போகிறது.

ஒரு மாநிலத்தின் கடன் அளவைப் பார்க்கும் பொழுது, அதை அந்த மாநிலத்தினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுவதே சரியான அளவுகோல் ஆகும்.

ஏனெனில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 2010-2011-ம் ஆண்டில், மொத்தக் கடன் ரூ.1,01,349.47 கோடியாக இருந்தது என்றால், அந்த வருடத்தின் மாநில உற்பத்தி மதிப்பு ரூ.5,18,576 லட்சம் கோடியாக இருந்தது.

அதேசமயம், 2020-2021-ம் ஆண்டில், மொத்தக் கடன் ரூ.4,85,502.54 கோடியாக இருக்கிறது என்றால், இந்த ஆண்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.19,43,399 லட்சம் கோடியாக உள்ளது. அதனால் தான், மொத்தக் கடன் அளவை மதிப்பிடும்போது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் அளவின் விகிதாச்சாரம் எவ்வளவு இருக்கின்றது என்பதையே நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, உயர்ந்து கொண்டே வருவதால், கடன் அளவு உயர்ந்தாலும், அதை திருப்பிச் செலுத்துவதற்கான திறனும் அதிகரித்துக் கொண்டேவருகிறது.

மு.க.ஸ்டாலின் ஊர் ஊராகப் போவாராம். மனு வாங்குவாராம், வாங்கி ஒரு பெட்டியில் போட்டு பூட்டுவாராம். திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டுவாராம். அதை துணியை வைத்து கட்டி, அரக்கும் வைப்பாராம்.

எப்பொழுது 100 நாட்கள் கழித்து அதை திறந்து பார்ப்பாராம். மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்ற வேண்டும் என்று ஊர் ஊராகச் சுற்றி பொய் பிரசாரம் செய்கின்ற நிலைதான் இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் நிலை. அது அவருடைய நிலை. நீங்கள் மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. இன்றைக்கும் இல்லை, என்றைக்குமே உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்..

இந்த இடைக்கால பட்ஜெட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் மனம் மகிழும்படி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தாராளமாக நிதி ஒதுக்கியிருக்கிறோம்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நம்மை எல்லாம் நம்பி இப்பேரவையில் உரைத்த கடைசி சூளுரை “எனக்கு பின்னாலும் தமிழகத்தை 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க .தான் ஆளும்’’ என்பதைத் தான். காலமகள் தந்த கோலத் திருமகளின் அந்த கடைசி சபதத்தை கணீர்குரல் சத்தியத்தை, தேசியகீதமாக நாம் தினம்பாடி உழைப்போம்.

மூன்றாம் முறையாகவும் இந்த முத்தமிழ் இயக்கத்தின் ஆட்சியை அமைத்திட, ஓயாது உழைப்போம். களம் புகும் போர்க்களத்தில் கம்பீரமாய் ஜெயிப்போம். புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் சித்திரைத் திங்களில் முத்திரைப் பதித்து புது வரலாறு படைப்போம். மே திருநாளில் இப்பேரவையில் மீண்டும் சந்திப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story