தமிழக அரசியலில் திருப்பம்: கமல்ஹாசனுடன், சரத்குமார் ‘திடீர்' சந்திப்பு - புதிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்


தமிழக அரசியலில் திருப்பம்: கமல்ஹாசனுடன், சரத்குமார் ‘திடீர் சந்திப்பு - புதிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்
x
தினத்தந்தி 28 Feb 2021 4:20 AM GMT (Updated: 28 Feb 2021 4:20 AM GMT)

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக கமல்ஹாசனை, சரத்குமார் சந்தித்து புதிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சிக்கும், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சிக்கும் இடையே புதிய கூட்டணி மலர்ந்துள்ளது. இரு கட்சிகளும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கின்றன.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு சரத்குமாரும், இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவிபாபுவும் நேற்று காலை வந்தனர். அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை, அவர்கள் இருவரும் சந்தித்து 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நல்லவர்களும், ஒருமித்த கருத்து கொண்டவர்களும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கருத்து கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கருத்துக்களை தெளிவாக குறித்துக்கொண்டேன். இதை மேற்கொண்டு எடுத்துச்செல்வது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு, நல்ல முடிவு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்து, ஒத்தகருத்து ஏற்படட்டும். இங்கு முதல் அமைச்சர் வேட்பாளர் யார்? என்று சொல்வதைவிட, முதலில் வெற்றிக்கான வேலையை தொடங்க வேண்டும் என்பதுதான் முக்கியம். விட்டுகொடுத்தால் தான் நல்லது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கூட்டணி உறுதிப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நீங்கள்தானா? ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா?

பதில்:- இப்போதைக்கு நாங்கள் பரிசீலித்து எடுத்த முடிவு அதுதான் (நான் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்). அது அவ்வாறாகவே இருக்கும். நாங்கள் சமரசத்துக்கு பெயர்போனவர்கள் அல்ல. இருந்தாலும் தேவைப்படும்போது மட்டுமே நல்லவற்றுக்காக சமரசம் செய்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி:- தமிழகத்தில் 3-வது அணி இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தியதில்லையே...

பதில்:- நீங்கள் சொல்வது சரித்திரம். நாங்கள் சொல்வது மாற்றம். சரித்திரம் நிகழ்ந்துவிட்டது. மாற்றம் நிகழப்போகிறது.

கேள்வி:- டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உங்களுடன் இணையுமா? அழைப்பு எதுவும் விடுத்திருக்கிறார்களா?

பதில்:- பார்ப்போம். இணைந்தவுடன் சொல்கிறேன். நாங்கள் எதுவும் பேசவில்லை. நாங்கள் புதிய கட்சி. வெற்றியை நோக்கி நடைபோடும் அந்த வேகத்தில் இருக்கிறோம். அதனால் நாங்கள் வரவேற்க தயாராக இருக்கும் ஒரு கட்சி. கதவுகள் திறந்திருக்கின்றன.

மேற்கண்டவாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

இதற்கிடையே மூத்த அரசியல்வாதியும், இலக்கியவாதியும், தமிழ் ஆர்வலருமான பழ.கருப்பையா கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நேற்று சேர்ந்தார்.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு அளித்தோருக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. கமல்ஹாசன் தலைமையிலான வேட்பாளர் தேர்வுக்குழுவினர் இந்த நேர்காணலை நடத்த உள்ளனர்.

அதேபோல வருகிற 3-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்க இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 21-ந்தேதி நடந்த மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்கவிழாவில் பேசிய கமல்ஹாசன், ‘மக்களுக்கு சேவை செய்யும் அந்த ‘ஆக்டிவ் லைப்’ தான் எனக்கு வேண்டும். அதற்குபின்பு சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று பேசினார். இந்த கருத்து கருணாநிதியை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘வயோதிகத்தையும், சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக பேசவில்லை. நான் என்னுடைய முதுமையை பற்றியும், நான் என்ன செய்வேன், செய்யமாட்டேன் என்பதையும் பற்றித்தான் கூறினேன்’ என்று கூறினார்.

Next Story