தென்மாவட்டங்களில் 3 நாள் தேர்தல் பிரசாரம்: சி.பி.ஐ.-அமலாக்கத்துறை மூலம் என்னை மிரட்ட முடியாது - தூத்துக்குடியில் ராகுல்காந்தி ஆவேச பேச்சு


தென்மாவட்டங்களில் 3 நாள் தேர்தல் பிரசாரம்: சி.பி.ஐ.-அமலாக்கத்துறை மூலம் என்னை மிரட்ட முடியாது - தூத்துக்குடியில் ராகுல்காந்தி ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2021 4:26 AM GMT (Updated: 28 Feb 2021 4:26 AM GMT)

சி.பி.ஐ.-அமலாக்கத்துறை மூலம் என்னை மிரட்ட முடியாது என்று தூத்துக்குடி பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக 3 நாள் பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.

இதற்காக விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வக்கீல்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாநில வக்கீல் பிரிவு தலைவர் சந்திரமோகன் வரவேற்று பேசினார். இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு, வக்கீல்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியவை நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்கக் கூடியவை. கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மீது ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடந்து வருகிறது. ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்படுகிறது. இந்த தாக்குதல் ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்த பெரும் முதலாளிகள் மூலம் நடக்கிறது. அவர்கள் அந்த அமைப்புகளுக்குள் ஊடுருவி அழித்து விடுகிறார்கள்.

இதனால் இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது. இது நாட்டின் சமநிலையையும் அழித்துவிடுகிறது. இந்த தாக்குதலில் இருந்து நாட்டை காப்பாற்றவே இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தற்போது எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி சென்று விடுகிறார்கள். வேட்பாளர் தேர்வு என்பது இந்த பிரச்சினையின் ஒரு பகுதிதான். மத்தியபிரதேசம், கோவா, அருணாச்சலப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு மக்கள் வாய்ப்பு தந்தார்கள். ஆனால், பண பலம் மூலம் மக்கள் தந்த வாய்ப்பை பா.ஜனதாவினர் திருடி விட்டனர்.

ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகியவற்றில் ஆட்சியை பறிக்க முயற்சி நடந்தது. இதில் அதிக பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கட்சி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணபலத்தை பயன்படுத்துகிறது.

இந்தியாவின் ஒரு பகுதியில் அரசு ஒட்டுமொத்தமாக அனைத்தையும் கைப்பற்றி விட்டது. நீதித்துறை, நிர்வாகத்துறை உள்பட பல்வேறு துறைகளையும் கைப்பற்றி உள்ளது. நீதித்துறை, நிர்வாகம் ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் காரணமாக இது நடக்கிறது. இதனால் நாடு மிகப்பெரிய சவாலை சந்திக்கிறது. கட்சித்தாவல் தடை சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தில் ஆரம்பத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவதை தடுக்கக்கூடிய வகையில் மாற்ற வேண்டும்.

நாட்டில் தற்போது நடக்கும் பிரச்சினைகளை மக்கள் உணர்ந்து எதிர்க்க துணிந்தால் தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களால் என்னை தொட முடியவில்லை. ஏனென்றால் நான் நேர்மையானவன். சி.பி.ஐ, மற்றும் அமலாக்கத்துறையை வைத்து என்னை மிரட்ட முடியாது.தொழிலாளர்கள் நலச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உள்ளார்கள். இதுபற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். இந்த நாட்டை 4 பேர்தான் வழிநடத்துகிறார்கள். நாம் இருவர் நமக்கு இருவர்.

நாட்டில் மதச்சார்பின்மை மீது முழுமையான தாக்குதல் நடந்து வருகிறது. அதனை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா செய்து வருகிறது. மதச்சார்பின்மை மீது நடக்கும் தாக்குதல் நமது கலாசாரத்தின் மீதும், வரலாற்றின் மீதும் நடக்கும் தாக்குதல் ஆகும்.

நான் இந்த நாட்டின் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் உள்ளவனாக இருக்கிறேன். ஆனால், பிரதமர் இரண்டு பேருக்கு மட்டுமே பயன் உள்ளவராக உள்ளார். நேரம் வரும்போது அவர்களே அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.

நமக்கு பரந்த நீதித்துறை சீர்திருத்தம் தேவை. நீதித்துறையை சீர்திருத்தம் செய்ய ஐ.ஜே.எஸ் என்ற ஒரு தேர்வை கொண்டு வரலாம். அதனை நான் ஏற்கிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஒரு முழுமையானது என்று கூறமுடியாது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வெளிப்படையான சோதனைக்கு அனுமதிக்கப்படும் போது அதை ஏற்றுக்கொள்ளலாம்.

தேசிய குடியுரிமை சட்டம் ஒரு பாரபட்சமான சட்டம். வேளாண் சட்டங்கள் இந்திய விவசாய அமைப்பை சீர்குலைக்க உருவாக்கப்பட்டது. வேளாண் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டாம் என்று கூறவில்லை. சீர்திருத்தம் என்ற பெயரில் வேளாண்மையை சீர்குலைத்து விடக்கூடாது.

சீனா இந்தியாவின் சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வரை ஊடுருவி உள்ளது. பா.ஜனதா ஆட்சி இருக்கும் வரை சீனாவிடம் இழந்த நிலத்தை இந்தியாவில் மீண்டும் பெற முடியாது.

காங்கிரஸ் அரசு இருந்தபோது சீனாவை துணிச்சலுடன் எதிர்த்தது. ஆனால் இன்றைய பிரதமருக்கு அந்த தைரியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திரண்டிருந்த பொதுமக்களிடமும், முத்தையாபுரத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் இடையேயும் பேசினார்.

பின்னர் கோவங்காட்டில் உப்பள தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். தொடர்ந்து அங்குள்ள உப்பளத்தில் உப்பு வாரினார்.

பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.

Next Story