மோடியும், எடப்பாடி பழனிசாமியும் பேசுவார்கள், செய்யமாட்டார்கள் “மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக, கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு


மோடியும், எடப்பாடி பழனிசாமியும் பேசுவார்கள், செய்யமாட்டார்கள் “மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக, கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2021 4:31 AM GMT (Updated: 28 Feb 2021 4:31 AM GMT)

மோடியாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் பேசுவார்கள், மக்களுக்காக எதையும் செய்யமாட்டார்கள் என்றும், மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக, கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் படப்பை - கரசங்காலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-

நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் எனது கனவுத்திட்டம் தான் உங்களது குறைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என்பதாகும். ஆட்சிக்கு வருகிறோம். பல்வேறு திட்டங்களை தீட்டுகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கிறோம். இவை எல்லாம் ஒரு பக்கம் நடந்தாலும் - இன்னொரு பக்கத்தில் ஏழை, எளிய பாட்டாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று நான் முடிவு எடுத்துள்ளேன். உங்களது கோரிக்கை மனுக்களை பரிசீலித்து 100 நாட்களில் தீர்ப்பேன்.

தமிழகத்தை சரி செய்தாக வேண்டும். இந்த ஊழல் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பலம் தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு.

சமீபத்தில் கோவையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனத்தை தி.மு.க. மீது செய்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள்தான் என்றும் சொல்லி இருக்கிறார் மோடி. எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு அவர் அப்படி பேசினார்?.

பா.ஜ.க.வினர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்திய வன்முறைகளை நான் சொல்லவா? அதற்கு ஒரு நாள் முழுக்க வேண்டும்.

இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்று சொன்னால் இப்போது 90-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இருக்கிறோம்.

இதை தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களை மோடி சொல்லி இருக்கிறார். மோடி அவர்களே உங்கள் பா.ஜ.க.வின் பலம் என்ன என்பதை முதலில் பாருங்கள். 1998-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் 3 எம்.பி.க்கள் வென்ற கட்சி பா.ஜ.க. 1999 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் 4 எம்.பி.க்கள் வென்ற கட்சி பா.ஜ.க.. 2014-ம் ஆண்டு பல கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு கன்னியாகுமரியில் மட்டும் பா.ஜ.க. வென்றது.

இதைத்தவிர மற்ற தேர்தல்கள் அனைத்திலும் தோற்ற கட்சி தான் பா.ஜ.க. இன்றைக்கு இருக்கும் சட்டமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினரே இல்லை! தமிழகத்தில் இருந்து எந்த பா.ஜ.க. எம்.பி.யும் டெல்லி போகவில்லை. ஆனால் மோடி சொல்கிறார், தி.மு.க. பலம் இழந்துவிட்டது என்று. பிரதமர் மோடியாக இருந்தாலும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் பேசுவார்கள். செய்யமாட்டார்கள். தி.மு.க. சொன்னதை செய்யும். செய்வதைத்தான் சொல்லும்.

மு.க.ஸ்டாலின் ஆகியநான் வீட்டுக்கு விளக்காவேன்! நாட்டுக்கு தொண்டனாவேன்! மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்! இது அண்ணாவின் மீது ஆணை. கருணாநிதி மீது ஆணை! மே மாதம் முதல் இதனை நேரடியாக உணர்வீர்கள். தி.மு.க. ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story