சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம் தடைகளாக இருக்கின்றன - வெங்கையா நாயுடு வேதனை


சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம் தடைகளாக இருக்கின்றன - வெங்கையா நாயுடு வேதனை
x
தினத்தந்தி 28 Feb 2021 5:04 AM GMT (Updated: 28 Feb 2021 5:04 AM GMT)

சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம், அணுக இயலாமை ஆகியவை தடைகளாக இருப்பது வேதனை அளிப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பல்கலைக்கழக துணை வேந்தவர் டி.எஸ்.என்.சாஸ்திரி உள்பட பேராசிரியர்கள், நிர்வாகிகள் என பலர் பங்குபெற்றனர். விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

சாமானிய மனிதனுக்கு நீதி முறையாக கிடைப்பதற்கு, மிகுதியான காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம், அணுக இயலாமை போன்றவை தடைகளாக இருக்கிறது. “நீதியை நாடும் ஏழை மனிதனை” பற்றிய சிந்தனையும், செயல்பாடுகளும் தான் வழக்கறிஞர்களின் முக்கிய உந்து சக்தியாக விளங்கவேண்டும். பொதுமக்களுக்காக சேவையாற்றுவோருடன் தொடர்புடைய குற்ற வழக்குகள் விரைவாகவும், உணர்ச்சி வசப்படாத வகையிலும், பாரபட்சமற்ற முறையிலும் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக, அரசு ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை பிரத்யேகமாக கையாள்வதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம். தேர்தல் சம்பந்தமான வழக்குகள் மற்றும் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு தனியே விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம்.

சட்டமன்ற கட்சித் தாவல் வழக்குகள், உரிய கால கட்டத்திற்குள் விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். இமாச்சல பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களின் சட்டமன்றங்களில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு மன்றத்திலும் உயரிய அறநெறிகளையும், முன்மாதிரியான நடத்தைமுறையையும் கடைப்பிடிக்கவேண்டும். மக்களவை நடவடிக்கைகளில் அடிக்கடி இடையூறுகள் ஏற்படுகிறது. எந்த ஒரு பிரச்சினையையும் ஆலோசனை, விவாதம், தீர்வு ஆகியவை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும், இடையூறு ஏற்படுத்துவது அல்ல. தங்களது தொழிலில் சிறந்து விளங்குவதற்காக பட்டதாரிகள் கடுமையாக உழைக்கவேண்டும்.

ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறையை அமைக்கவேண்டும். காலனித்துவ மனப்பான்மையில் மாற்றம் ஏற்படவேண்டும். பட்டமளிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்நாட்டு உடைகளை கல்வி நிறுவனங்களும், நீதிமன்றங்களும் பின்பற்றவேண்டும்.

நடுநிலையான விசாரணை, உணர்ச்சி வசப்படாமல் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து, அனைத்து குடிமக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதே சிறந்த நீதி முறையாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றொரு முக்கிய சவால். நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான முறையைக் கண்டறியவேண்டும். கீழமை நீதிமன்றங்களில் சுமார் 87 சதவீத வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. பொதுநல வழக்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

தேவையற்ற சம்பவங்களுக்கு பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். பொதுநல வழக்குகள், தனியார் நல வழக்குகளாக மாறக்கூடாது. நலிந்த பிரிவினர் குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயனடையும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய கொள்கைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் போது மட்டும்தான் நமது குடியரசு மீது அம்பேத்கர் கொண்டிருந்த கனவு நனவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story