மத்திய அரசின் நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு: ‘‘இந்தியாவின் எதிர்காலத்தை தமிழகம்தான் தீர்மானிக்க வேண்டும்’’ - நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு


மத்திய அரசின் நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு: ‘‘இந்தியாவின் எதிர்காலத்தை தமிழகம்தான் தீர்மானிக்க வேண்டும்’’ - நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2021 6:21 AM GMT (Updated: 28 Feb 2021 6:21 AM GMT)

இந்தியாவின் எதிர்காலத்தை தமிழகம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.

நெல்லை,

"வாங்க ஒரு கை பார்ப்போம்" என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று இரவு நடந்தது.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். பொருளாளர் ரூபி மனோகரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து ெகாண்டு பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களை சந்திக்கும்போது மகிழ்ச்சியும், புது அனுபவமும் கிடைக்கிறது. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி மீது தமிழக மக்கள் அதிக பாசம் கொண்டு இருந்தனர். தற்போது என்னிடமும் அதிக பாசம் கொண்டு உள்ளனர்.

தமிழர்களாகிய நீங்கள் ஏழ்மையில் இருந்தாலும் உங்கள் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுப்பது கிடையாது. இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழகம் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்டும் என்ற உணர்வு எனக்கு உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறு, குறு தொழில்கள் அதிகம் உள்ளது. இந்திய மக்கள் பயன்படுத்தும் காலணிகள், ஆடைகள், செல்போன்கள் அனைத்திலும் சீன தயாரிப்பு என்று போடப்படுகிறது. ஆனால் நம்மிடம் லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். மத்திய அரசும், தமிழக அரசும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இந்த தயாரிப்புகள் அனைத்தும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

ஆனால் மத்திய அரசு சிறு, குறு தொழில்களுக்கு ஆதரவு தருவது இல்லை. விவசாயிகளுக்கும் ஆதரவு அளிப்பது கிடையாது. இந்தியாவில் பெரும் தொழில் அதிபர்கள் எளிமையாக வங்கிகளில் கடன் வாங்கி விடலாம். ஆனால் சிறு, குறு தொழிலாளர்கள் கடன் வாங்க முடியாது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு அரசானது ஏழைகளுக்கு சலுகைகளையும், பணக்காரர்களுக்கு வரியையும் விதிக்க வேண்டும். ஆனால் மோடி அரசு ஏழைகளுக்கு வரியை விதித்து பணக்காரர்களுக்கு சலுகைகளை அளிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. பிரதமர் மோடி பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த பயமும் கிடையாது. அவரால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் நான் நேர்மையானவன். நான் படுத்த 30 நிமிடங்களில் நிம்மதியாக தூங்கிவிடுவேன். ஆனால் தமிழக முதல்-அமைச்சரால் நிம்மதியாக தூங்க முடியாது. ஏனென்றால் அவர் நேர்மையானவர் அல்ல. அதனால் தான் அவர் மோடியை சார்ந்து இருக்கிறார்.

தமிழகத்தின் எதிர்காலம் மக்களின் கையில் தான் உள்ளது. தேர்தலில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் தமிழக மக்களின் அன்பை முழுமையாக உணர்கிறேன். அன்பால் புதிய தமிழகத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல்காந்திக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன், வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கினார். நாங்குநேரி முத்துகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கினார்.

கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய செயலாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலச் செயலாளர் எஸ்.ஆர்.எம். குமரேஷ், மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், செயல் தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், மயூரா ஜெயக்குமார், எம்.பி.க்கள் மாணிக்தாகூர், செல்லக்குமார், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, முன்னாள் எம்.பி.கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, விஜயதாரணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு பொதுச்செயலாளர்கள் நித்திய பிரியா ரவி, ஜெஸ்கர் ராஜா, மாநில வக்கீல் அணி துணைத் தலைவர் பால்ராஜ், வட்டார தலைவர்கள் டியூக் துரைராஜ் (பாளையங்கோட்டை), வாகைதுரை (நாங்குநேரி மேற்கு), மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் பத்மசிங் செல்வ மீரான், பரப்பாடி சாலமோன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Next Story